காலஞ்சென்ற துடிசைகிழார் அ. சிதம்பரனார் ஆவின் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய ஐந்தன் கலவையே ஆனைந்து என்பர். இது உத்திக்குப் பொருத்தமே; ஆயின் இற்றை வழக்கிலில்லை. |
8. ஒழுங்கு: |
மாந்தன் தோன்றி ஐந்திலக்கம் ஆண்டிற்கு மேலாயினும் இன்னும் பல நாட்டு மாந்தரிடைக் கூட்டுறவும் ஒழுங்கும் தோன்றவில்லை. |
நீரில் வாழும் இறாவும் மீனும் கூட்டங் கூட்டமாக இயங்குகின்றன. நிலத்தில் வாழும் ஓநாயும் மானும் போன்ற விலங்குகள் மந்தை மந்தையாக மேய்ந்து தத்தம் சேக்கை திரும்புகின்றன. நிலத்திலும் வானிலும் இயங்கும் வெட்டுக்கிளிகளும் குருவிகளும் படை படையாகப் பறந்திறங்குகின்றன. சில வெட்டுக்கிளிப் படைகள் வெயில் மறையுமளவு இலக்கக் கணக்கான கிளிகள் செறிந்தவை. |
ஒரு தேன் கூட்டிலுள்ள நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக் கணக்கான தேனீக்கள் ஒரு தாயும் பல ஆணும் கழிபல பெண்ணும் சேர்ந்த ஒரு குடும்பமாய் இருந்து தத்தம் வேலையை ஒழுங்காகச் செய்து வருகின்றன. |
சிறுமைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்பெறும் சிற்றெறும்பும், இலக்கக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் ஒரு வளைக்குள் குடியிருந்து எக் காரணத்தையிட்டும் ஏனை வளையெறும்புகளொடு மோதாமல், ஊணிருக்கு மிடத்தை ஒற்றாலறிந்து தலைமையும் முற்காவலும் பிற்காவலும் அமைத்துக் கொண்டு, ஒவ்வொன்றாகவோ சிற்சிலவாகவோ ஒழுங்கான வரிசையாகச் சென்று, இழுக்கவியலாததை இருந்த விடத்தும் இழுக்க வியல்வதை வளைக்கு இழுத்துச் சென்றும் ஒற்றுமையாகப் பகுத்துண்டு தொன்றுதொட்டு நடாத்திவரும் உயரிய குடியரசு, மேனாட்டாரும் நாணித் தலைகுனியத்தக்க வியத்தகு செய்தியாம். |
நாய் முகத்தையுடைய ஒருவகைக் குரங்கினம் (baboon) வேலைப் பகுப்பும் ஆட்சியொழுங்கும் உடையதென நூல்கள் கூறும். |
9. பண்பாடு: |
மாந்தரிடைக் காண்டற்கரிய பல பண்பாட்டுக் குணங்கள் அஃறிணை யுயிர்களிடத்துக் காணப்படுகின்றன. |
குருவி, காகம், புறா முதலிய பறவைகள் ஒருமனை மணத்தை உறுதியாகக் கடைப்பிடிக்கின்றன. அன்றில், மகன்றில் என்னும் பறவைகள் இணைபிரியாது வாழ்ந்து ஒன்றையொன்று பிரிவாற்றாமல் உடனிறக்கும் உண்மைக் காதலன. |
கவரிமான் என்னும் திபேத்தியக் காட்டெருமை, தன் உடம்பினின்று ஒரு மயிர் வீழினும் உயிர்விடத்தக்க தலையாய மானமுடையது. |