பக்கம் எண் :

மாந்தன் செருக்கடக்கம்131

இயங்குதிணை, நிலைத்திணை ஆகிய இரு பால் அஃறிணை யுயிரிகளும், உடம்பு முழுமையும் மட்டுமன்றி உறுப்புறுப்பாகவும், மாந்தர்க்குப் பயன்பட்டுவருகின்றன.
     மாடு செல்வம்போற் பயன்படுவதால், 'மாடு' என்பதே செல்வத்திற்குப் பெயராயிற்று, (pecuniary என்ற ஆங்கிலச் சொல்லும் இக்கருத்ததே- L. peccv = cattle).
14. பன்னா ளுணவேற்றல்
     ஒட்டகம் ஒரு மாதத்திற்கு வேண்டும் உணவை ஒருங்கே உட்கொள்ள வல்லது.
  "ஒருநா ளுணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக் கேலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ வறியா இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது"
என்று புலம்பினார் ஒளவையார்.   
15. நீடுண்ணாமை
     ஒட்டகம் பன்னாளுணவை ஒருங்குட் கொள்ளலில் நீடுண்ணாமை யும் அடங்கும்.
     மூட்டைப் பூச்சி மும்மாதம் உண்ணா துயிர் பிழைக்கும்.
16. பிறந்தவுடன் இயங்கல்
     சில பறவைக் குஞ்சுகளும் விலங்குக் குட்டிகளும் பிறந்தவுடன் இயங்க வல்லன.
17 மூவிட வாழ்க்கை
     சில ஊருயிரிகள் நிலத்திலும் நீரிலும், சில பறவைகள் நிலம் நீர் வான் ஆகிய மூவிடத்திலும் இயங்க வல்லன.
18 வெட்ட வெட்டத் தளிர்த்தல்
     எல்லா நிலைத்திணை உயிரிகளும் வெட்ட வெட்டத் தளிர்க்கும். வாதமடக்கி போன்ற சில மரத்தின் கிளைகள், காய்ந்த பின்பும் மழை பெய்யின் தளிர்க்கும்.
     அட்டை, பூரான் போன்ற பூச்சிகள் நடுவில் வெட்டுண்ட பின்பும் பிழைக்கும்.
19. காப்பு:
     சில மரஞ்செடி கொடிகளும் அவற்றின் உறுப்புக்களும் நோயி னின்றும் பேயினின்றும் காக்கும் திறத்தனவாய்க் கொள்ளப்பெறும்.