பக்கம் எண் :

மாராயம்143

  வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றுங் காண்டிரோ வரவே" புறம்

(287)

     இது தண்ணடை பெறுகின்றது."
     தண்ணடை - நாடு, மருதநிலத்தூர்.
     "வேந்துவிடு தொழிலின் படையுங் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே."

(மரபியல், 83)

என்று தொல்காப்பியம் கூறுவதற்கேற்ப, புறப்பொருள் வெண்பாமாலை 'மாராய வஞ்சி' என்னுந் துறைக்குக் கூறும்,

     "நேராரம் பூண்ட நெடுத்தகை நேர்கழலான்
சேரார் முனைநோக்கிக் கண்சிவப்பப்-போரார்
நறவேய் கமழ்தெரியல் நண்ணா ரெறிந்த
மறவே லிலைமுகந்த மார்பு"
 
என்னும் வெண்பா, போர்மறவர் முத்தாரங்களை மாராயமாகப் பெறும் செய்தியைக் குறிக்கின்றது.
     இனி பகையரசன் தலையையோ அவனுடைய படைத்தலைவன் தலையையோ கொண்டுவந்து கொடுத்த மறவனுக்கு வேந்தன் செய்யும் சிறப்பு 'தலைமாராயம்' என்னும் காஞ்சித்திணைத் துறையாகப் புறப்பொருள் வெண்பாமாலையிற் கூறப்பட்டுள்ளது. பகைவனின் தலையைக் கொண்டு வந்து கொடுப்பதற்குச் செய்த மாராயம் தலைமாராயம்.
     அதற்குரிய வெண்பா.
     "உவன்தலை யென்னும் உறழ்வின்றி யொன்னார்
இவன்தலையென் றேத்த வியலும்-அவன்தலை
தந்தாற்கு நல்கல் வியப்போ கிளந்தேத்தி
வந்தார்க் குவந்தீயும் வாழ்வு."
 
என்பது இது தருவானது பெருவாழ்விற்கேற்ற பெருஞ் செல்வத்தைக் குறிக்கின்றது.
     இனி, நாடும் ஊரும் ஆரமும் செல்வமும் முதலிய உடமைகளைக் கொடுப்பதுடன், மாராயன் என்னும் பட்டத்தையும் அரும்பணி யாற்றிய அமைச்சர் படைத் தலைவர் கருமத்தலைவர் முதலியோர்க்கு வேந்தன் மாராயமாகக் கொடுப்பது வழக்கம்.
     "பஞ்சவன் மாராயன்..........கொங்காள்வான்" என்று கல்வெட்டில் வருதல் காண்க. அரிவர்த்தன பாண்டியனின் அமைச்சராகிய மாணிக்கவாசகர் பிராமணரா யிருந்ததினால், தென்னவன் பிரமராயன் என்னும் பட்டத்தை மாராயமாகப் பெற்றார். முரஞ்சியூரிலிருந்த முடிநாகர் மரபைச் சேர்ந்த புலவர் ஒருவர் முடிநாகராயர் என்னும் பட்டம் பெற்றார் போலும்!