முக் குற்றம் | ஆதனின் (ஆன்மாவின்) அல்லது மாந்தனின் குற்றங்களை யெல்லாம் மூன்றாக அடக்கி, அவற்றை ஆசை, சினம், அறியாமை என முறைப்படுத்திக் கூறினர் நம் முன்னோர். அவற்றையே, | "காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமங் கெடக்கெடு நோய்" | | (குறள். 360) | என்றார் திருவள்ளுவர். காமம், ஆசை; வெகுளி, சினம்; மயக்கம், அறியாமை. வெகுளி, சினம் என்பன ஒருபொருட் சொல்லாயினும், வேகும் நெருப்பைப் போல வெம்மை மிக்க சினமே வெகுளி என அறிக. | "குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது" | | (குறள். 29) | என்னுங் குறளை நோக்குக. | பொதுவாக, அறியாமையே துன்பத்திற்கெல்லாம் மூலமாகச் சொல்லப்படுகின்றது. ஒரு பொருளைத் தவறாகப் பயன்படுத்துவதாலும், ஒரு கொடிய உயிரியிடம் அல்லது பொறியிடம் அல்லது இயற்கையிடம் அகப்பட்டுக் கொள்வதாலும், ஒரு தீயபொருளை நல்லதென்று நுகர்வதாலும், துன்புறுவது மெய்யே. ஆயின், அவற்றை அண்டாமலும் நுகராமலும் இருந்த விடத்திற் பாதுகாப்பாக விருப்பின், பெரும்பாலும் துன்பத்திற்குத் தப்பிக்கொள்ளலாம். ஒரு பொருளைத் தேடிச் சென்று அது கிடையாக்கால் துன்புறுவதற்கு, அது பற்றிய அறிவும் ஓரளவு கரணியமாம். ஆகவே, உண்மையில் துன்பத்திற்கு மூலக்கரணியமா யிருப்பது ஆசையேயன்றி வேறன்று. இன்ப துன்பங்களை விளைவிக்கும் நல்வினை தீவினைகளைச் செய்விப்பதும், ஒருவனுடைய ஆசையே யன்றி அறியாமையன்று. அதனாலேயே, | "அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" | | (குறள் 361) | "அவாவில்லார்க் கில்லாகுந் துன்ப மஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும்" | | (குறள். 368) | "இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந் துன்பத்துள் துன்பங் கெடின்" | | (குறள். 369) | | |
|
|