பக்கம் எண் :

146தமிழியற் கட்டுரைகள்

  "ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே
பேரா வியற்கை தரும்."

(குறள். 370)

     என்றார் திருவள்ளுவர். அவாவறுத்தல் என்னும் அதிகாரத்தைத் துறவறவியலின் இறுதியில் வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கதாம்.

     காமம் அல்லது ஆசை துன்பத்திற்கு மூலக் கரணியமா யிருப்பத னாலேயே அது முன்வைக்கப்பட்டது. விரும்பியதொன்று கிடையாமை யால் அல்லது வெறுப்பான தொன்றை இன்னொருவன் செய்ததனால், சினம் அல்லது வெகுளி பிறப்பது இயல்பே. ஆயின், காமத்திற்கும் வெகுளிக்கும் இடை நிலம் (middle ground) இருப்பதனால், வெகுளி என்பது காமம் என்பதன் எதிர்ச்சொல்லே (contrary term) யன்றி மறுதலைச் சொல் (contradictory term) அன்று. விரும்பாத பொருள்மே லெல்லாம் ஒருவனுக்கு வெறுப்புண்டாகாது. அம் மனப்பான்மை நொதுமல் நிலை யொத்ததே. காமத்தொடு எதிர்நிலைத் தொடர்பு கொண்டிருப்பதால், வெகுளி அதன்பின் வைக்கப்பட்டது.
     மயக்கம் என்றது அறியாமையே. அறிவு முற்றறிவும் சிற்றறிவும் என இருவகைப்பட்டிருப்பது போன்றே, அறியாமையும் முற்றறியாமையும் சிற்றறியாமையும் என இருதிறப்படும். ஒன்றைப்பற்றி ஒன்றும் தெரியாமை முற்றறியாமை. ஒன்றை இன்னொன்றாகப் பிறழ வுணர்தல் சிற்றறியாமை. ஒன்றை அதுவோ இதுவோ என மயங்கல்; அறிவிற்கும் அறியாமைக்கும் இடைப்பட்ட ஐயநிலை. சிற்றறியாமை திரிபு என்றும், முற்றறிவு தெளிவு என்றும், சொல்லப்பெறும். காம வெகுளி மயக்கம் என்னும் மூன்றையும் வடவர் ஐந்தாக விரிப்பர்.
     "குற்றங்க ளைந்தாவன: அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பென்பன; இவற்றை வடநூலார் பஞ்சக் கிலேசமென்பர்" என்று 38ஆம் குறளுரையிலும்,
     "அநாதியாய அவிச்சையும், அதுபற்றி யானென மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கிது வேண்டுமென்னும் அவாவும். அதுபற்றி அப் பொருட்கட் செல்லுமாசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கட் செல்லுங் கோபமுமென வடநூலார் குற்ற மைந்தென்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் ஆசைக்கண்ணு மடங்கு தலான், மூன்றென்றார்." என்று 360ஆம் குறளுரையிலும், பரிமேலழகர் கூறியிருத்தல் காண்க.
     அகங்காரம் என்னும் சொல், வடமொழியில் வினை முதனிலை யின்றி அஹம்-கார என நின்று, நான் என்னும் அகப்பற்றை யுணர்த்து மென்றும், தமிழில் அகங்கரி என்னும் முதனிலையடிப் பிறந்து அகங்கரிப்பு அல்லது செருக்கு என்று பொருள்படும் தொழிற்பெயர் அல்லது தொழிற் பண்புப் பெயராகுமென்றும். வேறுபாடறிக. அகம், மனம். கரித்தல், கடுத்தல்