பக்கம் எண் :

முக் குற்றம்147

அல்லது மிகுதல். அகம் + கரி = அகங்கரி - அகங்கரிப்பு. அகங்காரம் வட மொழியில், அஹம்-கார என்பது எனது என்னும் புறப்பற்றை யுணர்த்தும் மமகார என்பதன் மறுதலைச் சொல்லாம். தமிழில் அத்தகைய நிலை யின்மையை நோக்குக. இதனால் இருசொல்லும் வெவ்வேறெனவும், வடிவொப்புமையினாலும் ஆராய்ச்சியின்மையாலும் தமிழரால் அறியாதும், வடவரால் அறிந்தும், ஒன்றோடொன்று மயக்கப் படுகின்றன வென்றும் அறிக.

     இனி, ஆரியச் சார்பான சிவனியக் கொண்முடிபில் (சைவ சித்தாந்தத் தில்), ஆணவம், மாயை, காமியம் எனக் கூறியிருக்கும் மும்மலப் பெயரும், காம வெகுளி மயக்கம் என்பவற்றின் திரிப்பே யென்பது, என் 'தமிழர் மதம்' என்னும் நூலில் விளக்கப்பெறும். ஆணவம் என்பது ஆண் என்னும் அடிப்பிறந்து அகங்காரத்தை அல்லது வெகுளியைக் குறிப்பது; அணு என்னும் அடிப்பிறந்து அறியாமையைக் குறிப்பதன்று. மயக்கம் என்பதே அறியாமையை (உயிரொடு நிலையான தொடர்பற்ற உடம்பை நான் என உணரும் திரிபுணர்ச்சியை) உணர்த்தும். ஐம்பூதங்கட்கும் மூலமான மாயை வேறு; பிறழ்வுணர்ச்சியைக் குறிக்கும் மயக்கம் வேறு, மாய் + ஐ = மாயை (மாய்ந்த அல்லது மறைந்த நிலை). ஒ. நோ: சாய் + ஐ = சாயை = சாயா (வ), மாயை - மாயா (வ). காமம் - காமியம் = விருப்பமானவை. கார்மிய என்பதன் திரிபாகக் கொண்டு இருவகை வினையென்று கூறுவது பொருந்தாது.
திருவள்ளுவர் இல்லறத்தாலும் வீடுபேறுண்டெனக் கூறியிருத்த லாலும் சிவனடியார் பலர் இல்லறத்தில் நின்றே வீடுபெற்றதாகப் பெரிய புராணங் கூறுதலாலும் நுகர்ச்சியினாலும் நல்வினையாலும் பழந்தீவினை போக்கப்படு மாதலாலும் தீவினை கலவாது இறைவழிபாட்டோடு கூடிய நல்வினைத் தொகுதியும் பிறவிக்குக் கரணியமாம் என்பது உத்திக்குப் பொருந்தாமையாலும், இவ் வுலகிற் பிறந்து வளர்ந்து கற்றுத் துறந்து ஒரு வினையும் செய்யாமல் வீடுபெறலாமென்பது இயலாத தாதலாலும், "நல்வினை தீவினைகள் மேற்குறித்தவாறு தூலமாச் செய்யப்படும்பொழுது 'ஆகாமியம் என்றும் பின் சூக்குமமாய நிலைபெற்று நிற்கும்பொழுது 'சஞ்சிதம்' என்றும், பின் இன்ப துன்பங்களாய் வந்து பயன்படும்பொழுது 'பிராரத்தம்' என்றும் பெயர் பெறும் 'பிராரத்தமே' ஊழ் எனப்படுகின்றது. 'நல்வினை தீவினை' என இருவகைப்பட்டு விரியால் எண்ணிறந்தனவாய் நிற்றலின் சடமாயும் பலவாயும் உள்ள இவை 'காரியம், என்பதும். அதனால் இவை "தோற்றமும் அழிவும் உடையன" என்பதும், அதனால் மூல கன்மமே காரண கன்மமாய்த் 'தோற்றக் கேடின்றி நிற்கும்' என்பதும், பெறப்படும்." என்று அறப்புரவளாகம் (தருமையாதீனம்) வெளியிட்டுள்ள 'சித்தாந்தத் தெளிவியல்' என்னும் கொண்முடிபுத் தெளிவியல் கூறுவது (பக். 160) அறிவாராய்ச்சி மிக்க இக் காலத்திற் கேற்காது.
     ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என்னும் மூன்றையும் முறையே எதிர்வு, இறப்பு, நிகழ்வு எனத் தூய தமிழிற் கூறலாம்.