"அறம்பாடிற்றே" என்று நூலின் சிறப்புப் பெயரைக் குறியாது அதன் பொருள்வகையையே பொதுப்படக் குறித்தமையால், ஆலத்தூர்கிழார் காலத்தில் திருக்குறள் மிகப் பழைமையானதாகவும் அளவை நூலாகவும் இருந்திருத்தல் வேண்டும். |
சான்றோன் என்னுஞ் சொல், "சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே" (புறம். 312) என்பதிற்போல் கல்வியறிவொழுக்கத்தாற் சிறந்தவனை மட்டுமன்றி, "தேர்தர வந்த சான்றோ ரெல்லாம்', (புறம். 63) என்பதிற்போல் போர் மறவனையுங் குறிப்பது கருதத்தக்கது. |
4. கி.மு. 3ஆம் நூற்றாண்டினதான திருக்கோவை 25 கிளவிக் கொத்து களையும் 400 துறைகளையும் கொண்டிருக்க, இன்பத்துப்பால் என்னுந் திருக்குறட்கோவை கிளவிக்கொத்தின்றி 135 துறைகளே கொண்டிருத்தல். |
தொல்காப்பியத்திற் குறிக்கப்பட்டுள்ள துறைகள் ஏறத்தாழ நானூறு. அவற்றுட் சில திருக்கோவையில் இல்லாதன; சில பெயர் குறிக்கப்பெறாதன; சில, நுண்வேறுபாடுகளுடையன. திருக்கோவைக்குப் பிந்தின கோவைகளில் 45 வரை துறைகள் கூடியுள்ளன. திருக்குறள் அறநூலாதல் பற்றி அறமல்லாத துறைகள் விலக்கப்பட்டிருப்பினும், 135 என்பது மிகக் குறைவான தொகையாதலால், அது திருக்கோவைக்குப் பல நூற்றாண்டுகள் முந்தினதா யிருத்தல் வேண்டும். |
5. திருவள்ளுவர் மயிலையில் வாழ்ந்த ஏலேலசிங்கன் என்னும் கடல்வாணிகரிடம் நூல் வாங்கி நெசவுத்தொழில் செய்ததாகச் செவி மரபுக்கதை கூறுதல், |
ஏலேலசிங்கன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு. |
6. கிறித்துவிற்குப் பிற்பட்ட சிறப்பு நிகழ்ச்சி எதுவும் திருக்குறளில் குறிப்பாகவேனுங் கூறப்படாமை. |
கடைக்கழகச் செய்யுள்களிற் கூறப்பட்டுள்ள யவனரைப்பற்றித் திருக்குறளில் ஒரு குறிப்புமின்மை கவனிக்கத்தக்கது. |
இச் சான்றுகளால், திருவள்ளுவர் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண் டென்று கொள்வது மிகப் பொருத்தமென்றும், எவ்வகையிலும் அது கிறித்துவிற்குப் பிற்பட்டதாகாதென்றும், ஒருகால் புத்தாராய்ச்சியால் இம் முடிபு மாற்றப்பெறினும் திருவள்ளுவர் காலம் இதினும் முற்படுமே யன்றிப் பிற்படாதென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க. இன்னும் இதன் தொடர்பான பிற செய்திகளையெல்லாம் என் 'திருக்குறள் தமிழ் மரபுரை'யின் முன்னுரையிற் கண்டு தெளிக. |
கடைக்கழக முடிவு கி.பி. 5ஆம் நூற்றாண்டென்பது, காலஞ் சென்ற வரலாற்றுப் பேராசிரியர் (V.R.) இராமச்சந்திர தீட்சிதரின் முடிபாம். |
தொல்காப்பியர் காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டென்பது, என் தொல்காப்பிய விளக்கத்தில் தக்க சான்றுகளால் நிறுவப் பெறும். |
- திருவள்ளுவர் 2000 ஆண்டு விழா மலர், சேலம் 1969 |