பக்கம் எண் :

154தமிழியற் கட்டுரைகள்

     நோயாளிக்கு முன்பு கசப்பாகவும் காரமாகவுமிருந்து வருத்தினும், பின்பு நலம் பயக்கும் மருந்து போன்று, நெறி தவறியவருக்கு அல்லது அறியாதவருக்கு முன்பு கேட்பதற்கு வெறுப்பாக இருப்பினும், பின்பு நன்மை பயக்கும் நல்லறிவுரை கூறுவது வாயுறை வாழ்த்து.

     வாயுறை, மருந்து.

  "வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்
வேம்புங் கடுவும் போல வெஞ்சொல்
தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்(று)
ஒம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே."

(தொல். செய். 111)

     வாழ்த்துதல் என்பது ஒருவரை நலமாக நீடு வாழவைத்தல், அது, முற்றத் துறந்த முழு முனிவரான நிறைமொழி மாந்தர் அல்லது ஆன்றவிந் தடங்கிய சான்றோர் "நீடு வாழ்க" என்று சொல்வதனாலும், மூதறிஞர் கூறும் அறவுரை அல்லது அறிவுரையாலும் நிகழும். தனிப்பட்டவர்க்கு இவ்விரு வழியும் இயலும்; ஒரு தொகுதியார்க்கோ பின்னதே ஏற்கும்.
     திருவள்ளுவர், உலகினர் அனைவர்க்கும், சிறப்பாகத் தமிழர்க்கு, உரைத்த அறவுரையும் அறிவுரையுமான திருக்குறள், திருவள்ளுவ மாலையில் மதுரை யறுவை வாணிகன் இளவேட்டனார் என்னும் புலவர் பெயரிலுள்ள,
  "இன்பமுந் துன்பமும் என்னும் இவையிரண்டும்
மன்பதைக் கெல்லாம் மனமகிழ-அன்பொழியா
துள்ளி யுணர வுரைத்தாரே யோதுசீர்
வள்ளுவர் வாயுறை வாழ்த்து"
 
என்னும் வெண்பாவின்படி, 'வாயுறை வாழ்த்து' எனப்படினும் உண்மையிற் 'புறநிலை வாழ்த்து'ங் கலந்ததேயாகும்.    
     இயன்மொழி வாழ்த்திற் கடவுள் வாழ்த்தும் அடங்குவதனாலும், கடவுளை ஒருவர் புகழ்வதன்றி வாழவைத்தல் என்பது பொருந்தாமை யாலும், மாந்தரைப் புகழ்வதற்கும் கடவுளைப் புகழ்வதற்கும் வேறு பாடுண்மையாலும், கடவுள் வாழ்த்திலுள்ள சிறப்பான அச்சத்தோடு கூடிய அன்பு வணக்கத்தைக் குறித்தற்கு, வாழ்த்து என்னும் சொல்லினின்று வழுத்து (வ. ஸ்துதி) என்னும் சொல் திரிக்கப்பட்டது.
  "வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீ ரென்று."

(குறள். 1317)

என்னும் திருக்குறளில், வழுத்தினாள் என்னுஞ் சொல்லை வாழ்த்தினாள் என்னும் பொருளில் திருவள்ளுவர் ஆண்டிருப்பினும், அதைப் பாவலன் உரிமை (poetic licence) யென்றே அமைத்தல் வேண்டும்.