கடவுளை வழுத்தும் சிறப்பான கலிப்பா வகைகள் தேவபாணி யெனப்படும். ஆரியர் தமிழகம் வந்தபின் "வருணப் பூதர் நால்வகைப் பாணியும்" (சிலப். 6, 35-6) எனச் சிறுதெய்வ வழுத்தும் தேவபாணியெனப் பட்டமையால், முத்தொழில் புரிவோன் என்னுங் கொள்கைபற்றிக் கடவுளையொத்த சிவன் அல்லது திருமால் வழுத்துகள் பெருந்தேவபாணி யெனப்பட்டன. |
வள்ளுவர் கோட்டக் கால்கோள் விழாவில் வாழ்த்துப் பெறற்குரியார், திருவள்ளுவரும் அவருக்குக் கோட்டம் அமைப்போரும் ஆவர். இவருள் முன்னவர் வாழ்த்துப் புகழ்வு முறையிலும், பின்னவர் வாழ்த்து நீடுவாழ வேண்டல் முறையிலும், முன்னும் பின்னுமாக இக் கட்டுரையுள் அமையும். |
திருவள்ளுவர் வாழ்த்துத் தேவபாணியின்பாற் படும். |
2. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் கோட்டம் என்று பெயர் குறிக்கப்பெற்ற கோயில்கள் |
புறநிலைக் கோட்டம் (சிலப். 5:180) = ஸ்ரீ கோயில் என்னும் அருகன் கோயில். |
| "அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம் புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில் உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம் வச்சிரக்கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம் நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம்...." |
(சிலப். 9: 9-13). |
அமரர்தரு = தேவருலகத்துக் கற்பக மரம். வெள்யானை = ஐராவதம் என்னும் தேவர் கோனின் வெள்ளையானை. வெள்ளை நாகர் = வெண்ணிறப் பலராமர். உச்சிக்கிழான் = கதிரவன். ஊர் = சிவனிருக்கையாகிய கைலாயம் என்னும் வெள்ளிமலை. வேல் = வேலன் என்னும் முருகன். வச்சிரம் = தேவர் கோன் வயிரப் படைக்கலம். புறம்பணையான் = ஊர்ப் புறத்தையடுத்த ஐயனார் என்னும் சாத்தன். |
காமவேள் கோட்டம் (சிலப். 9:60). |
மணிவண்ணன் கோட்டம் (சிலப். 10:10) = திருமால் கோயில். ஐயை கோட்டம் (சிலப். 12:4) = காளி கோயில். பத்தினிக் கோட்டம் (சிலப். 30:151) = கண்ணகி கோயில். |
சுடுகாட்டுக் கோட்டம் அல்லது சக்கரவாளக் கோட்டம் (மணி. 6:30-1) = உலகம் முப்பத்தொன்றையும் தன்னுள்ளடக்கிய சக்கரவாளம் என்னும் கோளத்திலுள்ள, எல்லாத் தேவர்க்கும் பூம்புகார்ச் சுடுகாட்டையடுத்துச் சமைக்கப்பட்ட மாபெருங் கோயில். |
முதியோள் கோட்டம் (மணி:22:3) = நாவலந் தேயக் காவல் தேவியாகிய சம்பாபதி கோயில். |