பக்கம் எண் :

156தமிழியற் கட்டுரைகள்

     இனி, இறந்துபோன அந்தணர்க்கும் அரசர்க்கும் கற்புடைப் பெண்டிர்க்கும், உற்றா ருறவினராற் சமைக்கப்பட்ட பள்ளிபடைகளும் (சமாதிகளும்) கல்லறைகளும், கோட்டமென்றே மணிமேகலையிற் குறிக்கப்பட்டுள்ளன.

     வள்ளுவர் கோட்டக் கால்கோள் விழாவில் வாழ்த்துப் பெறற்குரியார், திருவள்ளுவரும் அவருக்குக் கோட்டம் அமைப்போரும் ஆவர். இவருள் முன்னவர் வாழ்த்துப் புகழ்வு முறையிலும், பின்னவர் வாழ்த்து நீடுவாழ வேண்டல் முறையிலும், முன்னும் பின்னுமாக இக் கட்டுரையுள் அமையும்.

     திருவள்ளுவர் வாழ்த்துத் தேவபாணியின்பாற் படும்.
2. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் கோட்டம் என்று பெயர் குறிக்கப்பெற்ற கோயில்கள்
     புறநிலைக் கோட்டம் (சிலப். 5:180) = ஸ்ரீ கோயில் என்னும் அருகன் கோயில்.
  "அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும்
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்
............................................................................
இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலை கோட்டமும்" 

(மணி. 6: 54-59)

     இனி,

  "இடுபிணக் கோட்டத் தெயிற்புற மாதலின்
சுடுகாட்டுக் கோட்ட மென்றல துரையார்"

(மணி. 203-4)

என்று, சுடலையும் கோட்டமென்றே குறிக்கப்பட்டிருப்பதால், மதிலால் அல்லது வேலியாற் சூழப்பட்ட எவ்விடமும் கோட்டம் என்னும் பெயருக்குரியதென்பது அறியப்படும்.    
3. கோட்டம் என்னும் சொல் வரலாறு
  உல் - உலம் = உருட்சி. உலம்வருதல் - உலமருதல் = சுழலுதல். உல் - உல - உலவு - உலாவு. உலவுதல் = வளைதல், சூழ்தல், சுற்றுதல், திரிதல்.
உல் - குல் - குல - குலவு.
குலவுதல் = 1. வளைதல் "குலவுச் சினைப் பூக்கொய்து" (புறம். 11:4). 2. உலாவுதல் "எமதன்னையை நினைத்தே குலவினனோ" (சிவரக. விசயை.14).
குலவு = வளைவு."குலவுக் கொடுஞ்சிலை" (பு. வெ. 1:10)
குலவு - குலாவு. குலாவுதல் = வளைதல். வளைத்தல். "குலாவுஞ் சிலையர்" (பு. வெ. 4:3).
குலு - குலுத்தம் = வளைந்த காயிலுள்ள பயற்று வகை. (திவா).
குல் - கொல் - கோல் = 1. (உருண்ட) திரட்சி. "கோனிற வளையினார்க்கு" (சீவக. 209). "கோற்றொடி மாதரொடு" (சிலப். 26:121). 2. உருண்டு திரண்ட தடி.
கோல் - கோலம் = பந்துபோற் சுருளும் முள்ளெலி.
கோல் - கோலி = குண்டு வடிவான விளியாட்டுக் கருவி. ம. கோலி, தெ. கோலி (g), து. கோளி(g), மரா. கோலீ (g).