பக்கம் எண் :

16

தமிழ் தனித்தியங்குமா?
     தமிழ் வரலாறு தவறாய் எழுதப்பட்டிருப்பதாலும் அதன் சிறப்பியல்பு தலைமைத் தமிழ்ப் பேராசிரியன்மாராலும் அறியப்படாதிருப்பதாலும், தமிழ் தவிர ஏனை மொழிகளெல்லாம் பிறமொழிக் கலப்புற்றிருப்பதனாலும், பல தென் சொற்கள் வட சொற்களெனக் கருதப்படுவதாலும், தமிழ் தனித்தியங்குமா என்னும் கேள்வி அறியார் வாயிலும் அறிந்தவர்கள் வாயிலும் நீண்ட நாளாயிருந்து வருகின்றது.
     சென்ற நூற்றாண்டில், கழக (சங்க) நூற்கல்வியும் தனித் தமிழுணர்ச்சி யும் மறைமலையடிகள் தனித் தமிழ்த் தொண்டும் இல்லாத காலத்தில், ஆங்கில நாட்டினின்று இங்கு வந்து தென்பாண்டி நாட்டிற் குடிபுகுந்து அரை நூற்றாண்டாகத் தமிழும் திரவிடமுமான தென்மொழிகளை யாய்ந்து தென்மொழி யொப்பியலிலக்கணங் கண்ட மறைத்திருக் கால்டுவெல் கண்காணியார், தமிழின் தொன்மையையும் முன்மையையும் தாய்மையை யும் தூய்மையையும் உள்ளவா றுணராவிடினும், "தமிழ் வடமொழித் துணை யின்றித் தனித்து வழங்குதல் மட்டுமன்றித் தழைத்தோங்குதலுங் கூடும்" என்று தேற்றம்படக் கூறியுள்ளார். அங்ஙனங் கூறி முக்கால் நூற்றாண்டிற்கு மேலாகியும் அவர் காலத்தின்பின் மொழியாராய்ச்சி எத்துணையோ முன்னேறியிருந்தும், இன்னும் அவர் கூற்றில் ஐயுறுவதும் ஆய்ந்து உண்மை காண மறுப்பதும், தமிழை வேண்டாத் தன்மையையே விளக்குகின்றது.
     குமரிக் கண்ட முழுக்கினாலும் பண்டைத் தமிழிலக்கிய அழிவினா லும் எத்துணையோ உலக வழக்குச் சொற்களும் செய்யுள் வழக்குச் சொற் களும் இறந்துபட்டிருந்தும், இன்னும் தமிழைத் தனி மொழியாய் வளர்க்கக் கூடிய பல்லாயிரச் சொற்களும் பற்பல சொற்கருவிகளும் தமிழில் இருந்தே வருகின்றன. வழக்கற்ற தமிழ்ச் சொற்களை வழக்காற்றுப் படுத்துவதும் இக் காலத்திற்கு வேண்டிய புதுச் சொற்களைப் புனைந்து கொள்வதுமாகிய இரு வழிகளைக் கையாளின், தமிழ் தனித்தியங்க எள்ளளவுந் தடையில்லை.
1. வழக்கற்ற தென் சொற்கள்
     வடமொழி தேவமொழி யென்னும் ஏமாற்றையும் பண்டைத் தமிழ் வேந்தரின் பேதைமையையும் துணைக்கொண்டு, ஆயிரக் கணக்கான வட