பக்கம் எண் :

29

மொழிபெயர் முறை

     ஒரு மொழியிலுள்ள சொற்களை அல்லது குறியீடுகளை வேறு மொழியில் பெயர்க்கும் முறைகள் ஐந்தாம். அவையாவன :-
     1. நேர்ச்சொல் (எ-கா : pen - தூவல்)
     2. வேர்ப் பொருட் சொல். (எ-கா : motor - இயங்கி)
     3. சிறப்பியற் சொல். (எ-கா : train - புகை வண்டி)
     4. ஒப்பொலிச் சொல்
     5. முதலெழுத்துச் சொல்
     இவற்றுள், முதலது முன்னமேயுள்ள சொல். ஏனையவெல்லாம் புதிதாய் ஆக்கப்பெறுவன.
     இவ் ஐ வகையுள், முதல் மூன்றும் "தமிழ் தனித்தியங்குமா?" என்னும் முந்திய கட்டுரையிற் கூறப்பட்டுள. ஏனையிரண்டே இங்குக் கூறப்பெறும்.
     ஒப்பொலிச் சொல்லாவது, ஒலியிலும் பொருளிலும் ஒக்குமாறு அமைத்துக்கொள்ளப் பெறும் சொல்.
     எ-கா : ஆங்கிலம்               தமிழ்
        Parliament                  பாராளுமன்று
        bracket                     பிறைக்கோடு
     Parliament என்பது பேசுங்களம் என்று பொருள்படும் தனிச் சொல் (ஒரு சொல்). பாராளுமன்று என்பது பாரை ஆளும் மன்று என்று பொருள்படும் முச்சொற்றொடர்.
     Parler என்பது பேசு என்று பொருள்படும் பிரெஞ்சு வினைச்சொல்; ment என்பது ஒரு பிரெஞ்சுத் தொழிற் பெயரீறு.
     ஆகவே, இவ்விரு சொற்கட்கும் எள்ளளவும் தொடர்பில்லை ஆயினும், ஒலியிலும் பொருளிலும் பேரளவு ஒத்திருக்கின்றன.
     braccal என்பது breeches (குறுங்காற் சட்டைகள்) என்று பொருள் படும் இலத்தீன் சொல். braga என்பது அதன் இசுப்பானியத் (Spanish) திரிபு. bragueta என்பது அதன் குறுமைப்பொருள் வடிவம் (diminutive). அதனின்று முதலில் bragget என்றும், பின்னர் bracket என்றும் ஆங்கிலச் சொல் திரிந்தது.