| "மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வ தில்வழி நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே" | (தொல். வினை. 45) |
எ-கா : ........ ஒருவன் றவஞ்செய்யிற் சுவர்க்கம் புகும், தாயைக் கொல்லின் நிரயம் புகும் எனவும், மிக்கதன் வினைச் சொனோக்கி அம் மிக்கதன் திரிபில் பண்பு குறித்த வினை. முதற் கிளவி நிகழ்காலத்தான் வந்தவாறு கண்டுகொள்க. |
| "வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினு நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும் இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை" | (தொல். வினை. 48) |
எ-கா : |
| "....... கூறை கோட்படா முன்னும், இக்காட்டுட் போகிற் கூறை கோட்பட்டான் கூறை கோட்படும் என்னும் ........... மழைபெய்யா முன்னும், மழை பெய்தது, மழை பெய்யும் என்னும் ஆண்டு எதிர் காலத்திற்குரிய பொருள் இறந்த காலத்தானும் நிகழ்காலத் தானும் தோன்றியவாறு கண்டுகொள்க. | |
இதுகாறும் கூறியவற்றால், தொல்காப்பியர் 'செய்யும்' என்னும் எதிர்கால வினை வாய்பாட்டையே, நிகழ்காலத்திற்கும் கொண்டமை தெளியலாம். ஆயின் அவர் காலத்துச் 'செய்கின்றான்' என்னும் வாய்பாட்டு வினை வழக்கில் இலதோ வெனின் உண்டு, அதனை அவர் செவ்வையாய் ஆராய்ந்திலர் என்றே கொள்ளல்வேண்டும். அஃதெங்ஙன மெனின், கூறுவல். |
'செய்கின்று' என்னும் பாலீறற்ற நிகழ்கால வினை, பழஞ்சேர நாடாகிய மலையாள நாட்டில், செய்யுந்து எனத் திரிந்து இருவகை வழக்கிலும் வழங்குகின்றது. இத் திரிபின்படியே, செய்கின்றான் என்னும் பாலீறற்ற வடிவம், முறையே, செய்குந்நான் - செய்குநன் என்றும் செய்குந்நான் - செய்யுந்நான் - செய்யுநன் - செய்நன் என்றும் திரிந்து, தமிழிலக்கியத்தில் தொன்றுதொட்டு வழங்கிவருகின்றது. இங்ஙனமே செய்குநர் செய்நர் எனப் பலர்பாற் சொல்லும் செய்குந. செய்ந எனப் பலவின்பாற் சொல்லும், வழங்கி வருகின்றன. இவையெல்லாம் தமிழில் நிகழ்காலங் குறித்த வினையா லணையும் பெயர்களாம். மகிழ்நன், வாழ்நன் (வாணன்) முதலியனவும் இத்தகையனவே. செய்யுந்து என்னும் மலையாள வடிவம் நிகழ்கால வினைமுற்றாம். |
'செய்குந' 'செய்ந' என்னும் வாய்பாட்டுப் பலவின்பால் வினையாலணையும் பெயர்கள், தொல்காப்பியத்திற் பலவிடத்தும் பயின்று வருகின்றன. |