பக்கம் எண் :

44தமிழியற் கட்டுரைகள்

அதன் முன்னூலான தொன்னூல். ஆகவே, எண்முறைபற்றி வேற்றுமை களைப் பெயரிட்டாள்வது தமிழில் தலைமையானதன் றென்பதும் பெற்றாம்.

     சமற்கிருத இலக்கணம் தமிழிலக்கணத்திற்குப் பிற்பட்டதனாலும் அதன் வழிப்பட்டதினாலும், தமிழ்முறையைப் பின்பற்றி, பின்வருமாறு வேற்றுமைகளை வகுத்துக் கூறுகின்றது.

       வேற்றுமை பொருள்
  1. பிரதமா விபக்தி கர்த்தா (வினைமுதல்)
  2. துவிதீய விபக்தி கர்மம் (செய்பொருள்)
  3. திருதீய விபக்தி கர்த்தா, கரணம் (கருவி)
  4. சதுர்த்தீ விபக்தி சம்பிரதானம் (கொடை)
  5. பஞ்சமீ விபக்தி அபாதானம் (நீக்கம்)
  6. சட்டீ (ஷஷ்டீ)விபக்தி சம்பந்தம் (தொடர்பு)
  7. சப்தமீ விபக்தி அதிகரணம் (இடம்)
  8. சம்போதன விபக்தி சம்போதனம் (விளி)
     தென்மொழி வடமொழிகளின் முன்மை பின்மையையும் முதன்மை வழிமையையும் அறியாமையால், தமிழிலக்கணம் சமற்கிருத விலக்கணத்தைப் பின்பற்றியதெனப் பிறழக் கூறினார் கால்டுவெல் கண்காணியர் என்க. தென்மொழி யிலக்கணம் குமரிநாட்டில் தோன்றியது கி.மு. பத்தாயிரம் ஆண்டுக்குமுன் என்றும், அதனைப் பின்பற்றி வடமொழி யிலக்கணம் தோன்றியது கி.மு. ஈராயிரம் ஆண்டுக்குமுன் என்றும் அறிதல் வேண்டும்.
     (6) வேற்றுமை, உண்மையில்ஏழேயாயினும் பெயரின் எண் நிலைகளுள் பெரும்பாலான வேற்றுமைப்பட்டவை யாதலாலும், இயல்பான பெயரும் பிறவற்றோடு ஒப்பு நோக்க வேற்றுமைப்படுதலானும், வேற்றுமை எட்டெனக் கூறப்பட்டன.
     ஒரு பொருளுக்கு இடும்பெயர் அதனை எழுவாயாக ஆளுதற்கே யாதலின் இயல்பான பெயரை முதல் வேற்றுமையாகக் கொள்வதே மொழியின் இயற்கை நிலையாம். இதற்கு மாறாக முதல் வேற்றுமைக்கும் திரிபெயர் கொள்வது திரிபுடைமொழியின் இயல்பென்க.
  "கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ".

- தமிழ்ப் பொழில், ஆவணி, 1956.