பக்கம் எண் :

50தமிழியற் கட்டுரைகள்

     "லளஃகான்" (நூன்மரபு.24) "ணனஃகான்" (க்ஷ.26) எனத் தொல் காப்பியத்தில் வந்திருப்பவை உம்மைத் தொடர்களாதலின், குறிலிணைக்கீழ் வந்தனவாகா. ஆயின், "இளஃகுமே" எனச் சிந்தாமணியில் (149) வந்திருப்பது விதிக்கு மாறாதலின், இதனையும் ஒற்றில் வழியொற் றெனவே கொள்ளல் வேண்டும்.
ஆய்தம் தோன்றும் வகை
     லகரத்திரிபு, வகரத்திரிபு, ளகரத்திரிபு, ஒற்றில் வழியொற்று, சாரியைப் புணர்ப்பு என ஆய்தம் தோன்றும் வகை ஐந்தாம்.
  'தகரம் வருவழி யாய்த நிலையலும்
புகரின் றென்மனார் புலமை யோரே'

(புள்ளிமயங்கியல் 74)

என்பது லகரத்திரிபு. கஃறீது, கற்றீது என்பன எடுத்துக்காட்டு. இவை உறழ்ச்சி. அஃறிணை பஃறுளி என்பன உறழ்ச்சியில்லாதன.    
  'வேற்றுமை யல்வழி யாய்த மாகும்'

(புள்ளிமயங்கியல் 84)

என்பது வகரத்திரிபு. "அஃகடிய, இஃகடிய, உஃகடிய, சிறிய, தீய, பெரிய" என்பன எடுத்துக்காட்டு.

  'ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே
தகரம் வரூஉங் காலை யான'

(புள்ளிமயங்கியல் 104)

என்பது ளகரத்திரிபு. முஃடீது, முட்டீது என்பன எடுத்துக்காட்டு. இவை உறழ்ச்சி.

     ஒற்றில் வழியொற்று முன்னர்க் காட்டப்பெற்றது.
     அஃகான், மஃகான், வஃகான் என்பன சாரியைப் புணர்ப்பு.
     'அஃது' என்பதன் குறுக்கமே 'அது' எனத் தெரிதலின், 'செய்வஃது' என்பது 'செய்வது' என்பதன் விரித்தல் திரிபெனக் கொள்வது சரியன்று.
     வகரத்திரிபும் சாரியைப் புணர்ப்பும் ஒத்தியலமைவு (assimilation) என்னும் நெறிமுறை பற்றியன.
ஆய்தம் வரும் தனிச்சொற்கள்
     ஆய்தச் சார்பையும் ஆய்தந் தோன்றும் வகையையும் துணைக் கொண்டு ஆய்தம் வரும் தனிச்சொற்களை ஆய்ந்து பார்ப்பின், அவற்றுட் பெரும்பாலான லகர ளகரத் திரிபாகவே போதரும். இத் திரிபு குமரிநாட்டின் ஒரு மருங்கு தோன்றியிருக்கலாம்.
     எ-கா:
அஃகு
     அல்குதல் = சுருங்குதல், குன்றுதல், நுணுகுதல்.
     அல்கு - அஃகு.