பக்கம் எண் :

53

மூவிடப் பதிற் பெயர்களின் முதற்கால எண்ணீறுகள்

     படர்க்கை என்னும் இடவகுப்பு, சுட்டுப்பெயர் சுட்டாப்பெயர் ஆகிய இருவகைப் பெயர்களையும் தன்னுளடக்குதலின், சுட்டுப் பெயர்களை மட்டும் தழுவும் அளவில் மூவிடப் பெயர் என்னும் தொகுதிக் குறியீட்டை ஆளுதல், குன்றத்தழுவல் என்னுங் குற்றத்தின் பாற்படுவதாம். படவே, தமிழ் முறைப்படி மூவிடச் சுட்டுப் பெயர் என்றோ, ஆங்கில முறைப்படி மூவிடப் பதிற்பெயர் என்றோ, குறியிட்டாளுதலே தக்கதாம்.

"உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே"

(தொல். நூன்மரபு. 1, 2)

"தீரார் நிழல குடஞ்சுட் டினத்துள்ளும்"

(கலித். 109, 3)

"சுட்டுத்தலை போகாத் தொல்குடி"

(சிலப். 12, 21)

"பிறநாற் பெருஞ்சுட்டு வேண்டுவான்"

(நீதி நெறி.20),

     என்பவற்றால், சுட்டாப்பெயர்களும், ஒருவகையில் ஓரளவு சுட்டுப் பெயர்களாய் அமையுமேனும், வெளிப்படையாய் அல்லது தெளிவாய்ச் சுட்டும் அல்லது பிரித்துக் காட்டும் பெயர்களே ஈண்டுச் சுட்டுப் பெயர் எனக் கொள்ளப்பட்டன வென்க.
     யான், யாம் என்பவற்றைத் தன்மைச் சுட்டுப்பெயர் என்றும், நீ, நீர் என்பவற்றை முன்னிலைச் சுட்டுப் பெயர் என்றும், அவன், அவள், அவர், அது, அவை என்பவற்றைச் சேய்மைச் சுட்டுப் பெயர் என்றும், இவன், இவள், இவர், இது, இவை என்பவற்றை அண்மைச் சுட்டுப் பெயர் என்றும், உவன், உவள், உவர், உது, உவை என்பவற்றை முன்மை அல்லது இடைமைச் சுட்டுப் பெயர் என்றும், தான், தாம் என்பவற்றைத் தற்சுட்டுப் பெயர் என்றும் அழைக்கலாம். இவற்றுள் தன்மையும், முன்னிலையும் அல்லாத வெல்லாம் படர்க்கையாகும். ஆகவே, அறுவகைச் சுட்டுப் பெயரும் மூவிடங்கட் குள்ளேயே அடங்கு மென்றறிக.
     சுட்டுப்பெயர் என்னுங் குறியீடு தன்மை முன்னிலைகட்குப் பொருந்தாதெனின், பதிற்பெயர் (pronoun) என்பது முற்றும் பொருந்துவதே. படி-(படில்)-பதில். படி என்னும் தென்சொல்லே வடமொழியில் பிரதி (ப்ரதி) எனத் திரிவதாலும் அத் திரிசொற்குப் பதில் என்பதும் ஒரு பொருளாத