பக்கம் எண் :

54தமிழியற் கட்டுரைகள்

லானும், ஒரு சிறப்புப் பெயர்களுக்குப் பதிலாக வரும் சுட்டுப்பெயரை அல்லது பொதுப் பெயரைப் பதிற்பெயர் என வழைத்தல் பொருத்தமானதே.
     உருது என்பது, தில்லி (Delhi) வட்டாரத்தில் 12ஆம் நூற்றாண்டில், இந்தியும், பாரசீகமும் அரபியும் கலந்து தோன்றிய கலவை மொழியே யாதலின். உருதுச்சொல் என ஒரு தனிச்சொல் இல்லையென்றும், உருதுவில் வழங்கும் தமிழ்த் திரிசொற்களுள், பதில் என்பதும் ஒன்று என்றும், பாரசீக அரபி மொழிகளிலும் சில தமிழ்ச் சொற்கள் உண்டென்றும் அறிந்து கொள்க.
     முதற் காலத்தில் தமிழில் தோன்றியனவாகத் தெரிகின்ற தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள், முறையே, ஏன், ஏம், ஊன், ஊம், ஆன் ஆம் என்பனவாகும். இவற்றுள் ஏன், ஏம் என்பன ஈ என்னும் அண்மைச் சுட்டுப்பிறந்த ஈன் ஈம் என்பவற்றின் மோனைத்திரிபாகவோ, உயர்வு குறித்த ஏ என்னும் சொல்லடிப் பிறந்தனவாகவோ, இருக்கலாம். ஊன், ஊம் என்பன, இதழ்குவிவதால் முன்னிலை யிடத்தைச் சுட்டும் ஊகாரச் சுட்டடிப் பிறந்தனவாகும். இவையெல்லாம் பிற்காலத்திற் பின்வருமாறு திரிந்துள்ளன.
தன்மைப் பெயர்
     ஏன் - யான்- நான் (ஒருமை)

     ஏம் - யாம் - நாம் (பன்மை)

     (யாம் + கள் = யாங்கள். நாம் + கள் = நாங்கள்)
முன்னிலைப் பெயர்
     ஊன் - நூன் - நீன் - நீ (ஒருமை)
     ஊம் - நூம் - நீம் (பன்மை)
     (ஊம் + கள் = ஊங்கள், நூம் + கள் = நூங்கள். நீம் + கள் = நீங்கள். நீ + இர் = நீயிர் - நீவிர். ஊங்கள், நூங்கள் என்பன வழக்கற்றுப்போய் அவற்றின் வேற்றுமையடிகளான உங்கள், நுங்கள் என்பனவே எஞ்சியுள்ளன.
     நீன், நீம் என்னும் பெயர்கள் இன்றும் தென்நெல்லை வட்டாரத்தில் வழங்குகின்றன.
     ஊகார முதல் ஈகார முதலாகத் திரிவதை, தூண்டு - தீண்டு, (தூண்டாவிளக்கு-தீண்டா விளக்கு) நூறு-நீறு முதலிய திரிவுகளால் அறிக.
படர்க்கைப் பெயர்
     ஆன் - தான் (ஒருமை)
     ஆம் - தாம் (பன்மை)
     (தாம் + கள் - தாங்கள்) தான், தாம் என்பன முதற்காலத்தில் வெறும் படர்க்கைச் சுட்டுப் பெயர்களாக (demonstrative pronouns) இருந்து, பின்பு, படர்க்கைத் தற்சுட்டுப் பதிற்பெயர்களாக (third personal reflexive pronouns) மாறியிருக்கின்றன.