பக்கம் எண் :

58

பாயிரப் பெயர்கள்

     பாயிரம் என்பது முகவுரை. அது ஒரு நூற்கு இன்றியமையாத தென்பது, "எந்நூல் உரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்க" என்பது இலக்கணம். என்னை?

"ஆயிர முகத்தான் அகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே"

(நன். 54)

     என்றாராதலின் "பாயிரமென்றது புறவுரையை, நூல் கேட்கின்றான் புறவுரை கேட்கின் கொழுச் சென்ற வழித் துன்னூசி இனிது செல்லுமாறுபோல அந் நூல் இனிது விளங்குதலிற் புறவுரை கேட்டல் வேண்டும். என்னை?

பருப் பொருட்டாகிய பாயிரங் கேட்டார்க்கு
நுண்பொருட்டாகிய நூல் இனிது விளங்கும்!

     என்றாராகலின் "அப் பாயிரந்தான் தலையமைந்த யானைக்கு வினை யமைந்த பாகன் போலவும், அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்க மாகிய திங்களும் ஞாயிறும் போலவும், நூற்கு இன்றியமையாச் சிறப்பிற்றா யிருத்தலின்; அது கேளாக்காற் குன்று முட்டிய குரீஇப் போலவும் குறிச்சி புக்க மான் போலவும், மாணாக்கன் இடர்ப்படும் என்க" என்னும் நச்சினார்க் கினியர் உரையான் உணரப்படும். பவணந்தியார்.

மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோள் நல்லார்க் கணியும்போல் - நாடிமுன்
ஐதுரையா நின்ற வணிந்துரையை எந்நூற்கும்
பெய்துரையா வைத்தார் பெரிது."

(நன். 55)

     எனச் சில உவமை வாயிலாகவும் பாயிரத்தின் தேவையை வற்புறுத்தினார்.
     அப் பாயிரம் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து என்றார் நச்சினார்க்கினியர். அதையே,

"பாயிரம் பொது சிறப்பெனவிரு பாற்றே"

(நன். 2)

     என நூற்பா யாத்தார் பவணந்தியார். அவற்றுட் பொதுப்பாயிரம் எல்லா நூன் முகத்தும் உரைக்கப்படும். அதுதான் நான்கு வகைத்து.