பக்கம் எண் :

70

சிந்தாமணியின் செவ்விய வனப்பியல்

     செய்யுள், ஒன்றாய்த் தனித்திருப்பதுபற்றித் தனிநிலை என்றும், பலவாய்த் தொடர்ந்திருப்பதுபற்றித் தொடர்நிலை என்றும் இரு வகைப் படும். தொடர்நிலையும், சொற்றொடர்நிலை, பொருட்டொடர்நிலை என இரு திறப்படும்.
     செய்யுள் நூல்களையெல்லாம் பிற்காலத் திலக்கணியர் வடநூற் பாகுபாட்டைத் தழுவிச் 'சிறு காப்பியம், பெருங்காப்பியம்' என இரு வகையாகப் பகுப்பர். தொல்காப்பியர் உள்ளிட்ட தொல்லாசிரியரோ, அவற்றை,
"அம்மை அழகு தொன்மை தோலே
விருந்தே இயைபே புலனே இழைபென"
     எண் வகை வனப்பாகப் பகுப்பர். ஆகவே, வனப்பு என்பதே அவர் செய்யுள் நூற்கு இட்ட பெயராம். தனிநிலைச்செய்யுளும் ஓராயிரம் அடியும் ஈராயிரம் அடியும் கொண்டு ஒரு காவியமாகலா மாதலானும், தொடர்நிலைச் செய்யுள் காவியமாய் மட்டுமன்றி, இலக்கண நூலும் மருத்துவ நூலும் அற நூலும் பிற நூலுமாயிருக்கலா மாதலானும், தொடர்நிலைச்செய்யுள் என்பது 'காவியம்' என்னும் வடசொற்கு நேரான தென்சொல்லன்று.
     இதுபோது தமிழிலுள்ள வனப்புகளுள், சிந்தாமணியும் சிலப்பதி காரமும் தலைசிறந்தன என்பதை, நடுநிலையறிஞர் எவரும் மறார்.
     ஒரு வனப்பு, சொற்சுவை, பொருட்சுவை, யாப்புச்சுவை, அணிச் சுவை என்பவற்றிற் சிறந்திருத்தல் மட்டும் போதாது, மிகுந்த சொல் வளமும் இலக்கணச் செம்மையு முடையதாயும், பலகலை யியல்பை விளக்குவதாயும், வருங்காலத்தில் வரையப்படும் வரலாற்று நூற்குச் சான்றாகப் பல செய்திகளைக் கொண்டதாயும், சிறந்த வாழ்க்கை வரம்புகளை வகுத்து உயர்ந்த குறிக்கோளை வலியுறுப்பதாயும், சொல்லாராய்ச்சிக்குத் துணை செய்வதாயும் இருத்தல் வேண்டும்.
     இவ் வளவைப்படி, சிந்தாமணியின் வனப்பியற் செம்மையை ஆராய்வாம்: