(1) சொற்றிறம்: |
1. சொன்னயம்: |
1. இன்சொற்புணர்ப்பு: |
தேவர் இசைத்தமிழில் முற்றத் துறைபோகி இன்னிசை யின்பத்தை நுண்ணிதினுகரும் எஃகுச் செவி படைத்தவராதலின் இன்னோசைச் சொற்களைத் தேர்ந்தாளுவதோ டமையாது, செவிக்கின்பஞ் சிறக்குமாறு இன்னோசைச் சாரியை கொண்டும் சொற்களைப் புணர்த்துக்கொள்கின்றார். |
எடுத்துக்காட்டு: அண்ணலங்குமரன், ஆழியங்கழனி, மயிலஞ்சாயல், முல்லையங்கோதை. |
2. இலக்கணச்செம்மை: |
மதவியல் பற்றிச் சிந்தாமணியில் பல வடசொற்கள் புகுத்தப்பட் டிருப்பினும், அவற்றை யாண்டும் தமிழியல்பொடு பொருந்தத் தற்பவ மாகவே வடித்தாளுகின்றார் தேவர். கம்பராமாயணத்தில் 'லோபேன்' என்னும் லகர முதற்சொல் வந்துள்ளது போல, அன்முதலெழுத்தை மொழி முதற்கொண்ட ஒரு வடசொல்லும் சிந்தாமணியில் வந்தில்லை. |
3. சொற்றூய்மை: |
சிந்தாமணிச் சொற்றொகுதி, அந் நூற்காலத்தோடு பொருந்த நோக்கின், எத்துணையோ தூய்மையானதாகும். பெரும்பான்மையான செய்யுட்கள் தனித்தமிழிலேயே இயன்றுள்ளன. வடசொற்கள் வந்துள்ள சில செய்யுட்களிலும், அவை நூற்றுக்கு அரை முதல் முப்பது வரையே வந்துள்ளனவாதலின், சிந்தாமணியின் செந்தமிழ்த்திறத்தைப் பெரிதும் சிதைக்கவில்லை. |
| "சாமெனில் சாதல் நோதல் தன்னவன் தணந்த காலைப் பூமனும் புனைத லின்றிப் பொற்புடன் புலம்ப வைகிக் காமனை யென்றும் சொல்லார் கணவற்கை தொழுது வாழ்வார் தேமலர்த் திருவோ டொப்பார் சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பார்." | (1605) |
என்னுமிச்செய்யுள் தனித்தமிழில் இயன்றது. 'காமன்', 'திரு' என்பன தென்சொல்லே. |
| "பவழவாய்ச் செறுவு தன்னுள் நித்திலம் பயில வித்திக் குழவிநா றெழுந்து காளைக் கொழுங்கதிரீன்று பின்னாக் கிழவுதான் விளைக்கும் பைங்கூழ் கேட்டிரேற் பிணிசெய் பன்மா உழவிர்காள்! மேயும்; சீல வேலியுய்த் திடுமின்,' என்றான்." | (379) |
இதில், 'சீலம்' என்னும் ஒரு சொல்லே வடசொல்லாம், அதுவும் 'சீர்' என்னும் தென்சொற்கு இனமாதலின், அதை இரு மொழிப் பொதுச்சொல் எனக் கோடலே சாலச்சிறந்ததாம், |