(1) சொற்றிறம்: | 1. சொன்னயம்: | 1. இன்சொற்புணர்ப்பு: | தேவர் இசைத்தமிழில் முற்றத் துறைபோகி இன்னிசை யின்பத்தை நுண்ணிதினுகரும் எஃகுச் செவி படைத்தவராதலின் இன்னோசைச் சொற்களைத் தேர்ந்தாளுவதோ டமையாது, செவிக்கின்பஞ் சிறக்குமாறு இன்னோசைச் சாரியை கொண்டும் சொற்களைப் புணர்த்துக்கொள்கின்றார். | எடுத்துக்காட்டு: அண்ணலங்குமரன், ஆழியங்கழனி, மயிலஞ்சாயல், முல்லையங்கோதை. | 2. இலக்கணச்செம்மை: | மதவியல் பற்றிச் சிந்தாமணியில் பல வடசொற்கள் புகுத்தப்பட் டிருப்பினும், அவற்றை யாண்டும் தமிழியல்பொடு பொருந்தத் தற்பவ மாகவே வடித்தாளுகின்றார் தேவர். கம்பராமாயணத்தில் 'லோபேன்' என்னும் லகர முதற்சொல் வந்துள்ளது போல, அன்முதலெழுத்தை மொழி முதற்கொண்ட ஒரு வடசொல்லும் சிந்தாமணியில் வந்தில்லை. | 3. சொற்றூய்மை: | சிந்தாமணிச் சொற்றொகுதி, அந் நூற்காலத்தோடு பொருந்த நோக்கின், எத்துணையோ தூய்மையானதாகும். பெரும்பான்மையான செய்யுட்கள் தனித்தமிழிலேயே இயன்றுள்ளன. வடசொற்கள் வந்துள்ள சில செய்யுட்களிலும், அவை நூற்றுக்கு அரை முதல் முப்பது வரையே வந்துள்ளனவாதலின், சிந்தாமணியின் செந்தமிழ்த்திறத்தைப் பெரிதும் சிதைக்கவில்லை. | | "குரல்குர லாகப் பண்ணிக் கோதைதாழ் குஞ்சி யான்றன் விரல்கவர்ந் தெடுத்த கீதம் மிடறெனத் தெரிதல் தேற்றார் சுரரொடு மக்கள் வீழ்ந்தார்; சோர்ந்தன புள்ளு மாவும்; உருகின மரமுங் கல்லும்; ஓர்த்தெழீஇப் பாடு கின்றான்." | (723) | இதில், 'கீதம்' என்னும் ஒன்றே தெளிவான வடசொல், 'சுரர்' என்பது இரு மொழிப் பொது. | | "குரோதனே மானன் மாயன் கூர்ப்புடை யுலோப னென்பார் விரோதித்து விரலிற் சுட்டி வெருவரத் தாக்க வீரன் நிரோதனை யம்பிற் கொன்றான் நித்தைநீள் பசலைப் பேரோர் விராகெனும் வேலின் வீழ வெகுண்டனன்; அவரும் வீழ்ந்தார்." | (3080) | இதில், குரோதன், உலோபன், விரோதி, வீரன், நிரோதன், நித்தை (நித்திரை), பசலை (பிரசலை), விராகு (விராகம்), என்னும் எட்டும் வடசொற்கள். 'மானன்', 'மாயை' என்பன அருக சித்தாந்தச் சொற்களாயினும், முறையே 'மானி' 'மாய்' என்னும் தென்சொல்லடியாய்ப் பிறந்தவை. இச் செய்யுளில் எண் வடசொற்களிருப்பினும், செந்தமிழோசை சிதையா திருத்தல் காண்க. தீந்தமிழ்ச் சிலப்பதிகாரத்திலும், மதுரைத் தமிழ் மணிமேகலையிலுமே வடசொற்கள் பயின்றிருத்தலின், சிந்தாமணிக்கு அவற்றால் சிறப்பிழப்பில்லை என்க. தேவர், பல இடங்களில், அருக சித்தாந்தக் குறியீடுகளான வடசொற்களையும் தூய தமிழில் மொழி பெயர்த்தே செல்கின்றார். 3081ஆம் செய்யுளில், 'ஞானம், தரிசனம், அந்தராயம்' என்னும் வடசொற்கள், முறையே,'உணர்வு, காட்சி, பேறு' என மொழிபெயர்க்கப்பட் டிருத்தல் காண்க. | 2. சொல் வளம்: | 1. அரும்பொருட்பெயர்கள்: | | எ-டு : | அச்சுறு கொழுந்தொடர் - மரக்கட்டைகளில் இரும்பைத் தைத்து யானையின் வேகத்தை அடக்குமாறு அதன் கழுத்தில் மாலை போல இடுவதொரு கருவி. அடியூசி - அடியொட்டி (தப்பியோடுவார் அங்ஙனம் ஓடாதவாறு நிலத்தில் நட்டு வைக்கும் முள்.) அணிகம் - ஊர்தி. இளவுடையான் - இளவரசன். கோட்டகம் - பயிருள்ள நீர் நிலை. பண்ணுரை - புனைந்துரை (உபசார வார்த்தை) பாம்புரி - அகழியின் கீழ்ச் சூழ அமைத்த ஒரு மதிலுறுப்பு. முகவியர் - ஏற்றுக்கொள்பவர். வலஞ்சுழி - நந்தியாவட்டம். வடகம் - ஓர் உடை வகை. | | |
|
|