பக்கம் எண் :

74தமிழியற் கட்டுரைகள்

2. தொழின்முறை:
     நாமக ளிலம்பகத்தில், உழவுத்தொழில் மிக விரிவாக வரையப் பெற்றுளது. கோவிந்தையா ரிலம்பகம், காந்தருவதத்தையா ரிலம்பகம், மண்மக ளிலம்பகம் ஆகிய மூன்றனுள்ளும், போர்த்தொழில் அக்கால முறைப்படி அழகாகக் கூறப்பட்டுள்ளது.
     பொற்கம்மியம் பற்றிய சில செய்திகள் ஆங்காங்குக் காணப்படு கின்றன.
     எ-டு :
     "கறந்த பாலினுட் காசில் திருமணி
நிறங்கி ளர்ந்துதன் நீர்மைகெட் டாங்கு"

1325

     'கந்துக்கடன்' என்னும் ஆட்சிறப்புப் பெயர், ஒருகால், கந்து வட்டிக்குக் கடன் கொடுக்கும் வணிகத் தொழிலை உணர்த்தலாம்.

     காந்தருவதத்தையா ரிலம்பகத்தில் கடல் வாணிகம் கூறப்பட்டுளது.
3. விளையாட்டுகள்:
     "கோட்டிளந்த கர்களுங் கொய்ம்மலர தோன்றிபோற்
சூட்டுடைய சேவலுந் தோணிக்கோழி யாதியா
வேட்டவற்றி னூறுளார் வெருளிமாந்தர் போர்க்கொளீஇக்
காட்டியார்க்குங் கௌவையுங் கடியுங்கௌவை கௌவையே"

73

     இது, தகர்ப் போர், சேவற் போர், காடைப் போர் முதலிய ஆடவர் விளையாட்டைக் கூறுகின்றது. இதில், "அவற்றின் ஊறுளார்" என்று தேவர் குறிப்பது, அவரது அருட்பொலிவை உணர்த்தும்.

     "வைத்த பந்தெ டுத்தலும் மாலை யுட்க ரத்தலும்
கைத்த லத்தி னோட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும்
பத்தி யிற்பு டைத்தலும் பைய ரவ்வி னாடலும்
இத்தி றத்த பந்தினோ டின்ப மெல்லை யில்லையே."

151

     இது மகளிர் விளையாட்டாகிய பந்தாட்டு.
     குணமாலையா ரிலம்பகத்தில், இருபாலார்க்கும் பொதுவான இளவேனில் நீர் விளையாட்டு விரிவாக வருணிக்கப்பட்டுள்ளது.
4. பழக்க வழக்கங்கள்:
     அறுபத்துநாற்கலையுங் கற்றல், இழந்த அரசை எத்திறத்தும் கைப்பற்றுதல், வேண்டியவரை உயர்த்தி வேண்டாதவரை அடியோடழித்தல், பல மகளிரை மணத்தல், திரிபன்றி எய்தல் முதலிய அருஞ்செயல்களை யாற்றி மறக் கைக்கிளை மணம் புரிதல், பார்ப்பனர்க்குப் பெரும்பொற் கொடை அளித்தல், குற்றவாளிகட்கு நடை விளக்கெரித்தல் முதலிய கடுந்தண்டம் விதித்தல் இவை முதலியன பழக்க வழக்கங்கள்.