காதற்பொருளை உணர்த்தும் 'மாதர்' என்னும் சொல்லின் பகுதி 'மாது' என்பது. 'மாதியாழ்' என வருதல் காண்க. |
2. வழக்கற்ற சொற்கள்: |
இலக்கித்து (எழுதி) என்னுஞ்சொல், இலக்கணம் இலக்கியம் என்னுஞ் சொற்களின் பகுதியான இலக்கு என்பதினின்று திரிக்கப்பட்டு 'இலக்கி' என ஒரு வினை பண்டைக்காலத்து வழங்கினமையை உணர்த்தும். |
பொற்ற (நல்ல), பொற்றது (பொலிவு பெற்றது) என்னுஞ் சொற்கள், 'பொல்' என்னும் வழக்கற்ற வினையடியாய்ப் பிறந்த பெயரெச்சமும், வினைமுற்றுமாகும். 'கல், வில்' என்னும் வினையடியாக, 'கற்ற' 'கற்றது' 'விற்ற' 'விற்றது' என்னும் பெயரெச்ச வினைமுற்றுகள் பிறத்தலைக் காண்க. |
பொல்லுதல் = பொலிதல், அழகாயிருத்தல். பொல் - பொன். பொல் - பொலம். பொல் - பொலி - பொலிவு. பொல் + பு = பொற்பு. பொலம் - பொனம். |
'பொற்பு' என்னும் உரிச்சொல், 'பொற்ற' எனத் திரிந்ததென்று நச்சினார்க்கினியர் கூறுவது பொருந்தாது. உரிச்சொல் என்பது செய்யுட் சொல்லே யன்றி, இலக்கண வகைச் சொல் அன்று. 'பொற்பு' என்னும் தொழிற்பெயர் செய்யுளிற் சிறப்பாகப் பயின்று உரிச்சொல்லாயிற்று. |
3. புலவர் சொற்றிரிப்பு: |
புலவர் சொற்களைத் தம் செய்யுட்களில் மோனையெதுகைக் கேற்பத் திரித்துக்கொள்வர் என்பது, கம்பலம் (கம்பலை), அளமரு (அலமரு), இறுவரை (இருவரை), பிளிற்றல் (பிலிற்றல்), மத்தம் (மத்து), பொனம் (பொலம்) முதலிய சொற்களாற் பெறப்படும். |
4. தொல்காப்பிய வழு: |
'நும்' என்னும் சொல்லினின்று 'நீயிர்' என்னும் முன்னிலைப் பன்மைப் பெயர் திரிந்ததாகத் தொல்காப்பியர் கூறுவது பற்றி, 'நீம்' என்னும் சிந்தாமணிச் சொல்லைத் தேவர் படைப்பாகச் சில புலவர் கருதுகின்றனர். |
'நீம்' என்னுஞ் சொல்லே முந்தியதாம். 'நீன், நீம்' நீங்கள் (நீம்+கள்) என்பன முன்னிலை யொருமை பன்மைப் பெயர்கள். 'நீன், நீம்' என்னும் சொற்கள் இன்றும் தென்னாட்டில் நாட்டுப்புற மக்களிடை வழங்குகின்றன. கன்னடத்தில், 'நீன்' என்பது திரியாதும், 'நீம்' என்பது 'நீவு' (நீம்-நீமு-நீவு) எனத் திரிந்தும் வழங்குகின்றன. |
'நும்' என்பது (இறந்துபட்ட) 'நூம்' என்பதன் வேற்றுமையடியாகும். |
தன்மை முன்னிலைப் பெயர்களும் படர்க்கைப் பதிற்பெயர்களும், எழுவாய் வடிவில் நெடின்முதலவே அன்றிக் குறின்முதல் அல்ல. |