தெய்வங்களும் கற்புத் தெய்வங்களே. மறச்செயல் புரிந்த கற்புடைப் பெண்ணைத் தெய்வமாக வணங்கும் வழக்கமே, கடவுளின் ஆற்றலைப் பெண்பாலாக உருவகிக்கவும் போர்த் தெய்வத்தைப் பெண்பாலாகக் கொள்ளவுங் காரணமாயிருந்திருக்கலாம். | போரி லிறந்த சிறந்த மறவரும் வணங்கப்பட்டனரேனும், அவரைத் தாழ்ந்தோரன்றி உயர்ந்தோ ரேத்த இதுகாறுங் கண்டிலம். ஆகையால் பெண்பால் எந்நிலையினும் ஆண்பாலினுந் தாழ்ந்ததன் றென்பதும் கற்புடை மனைவியே ஒருவனுக்கு இம்மையில் தலைசிறந்த பேறென்பதும் மறக்கொணாத முடிபுகளாம். | பட்டினத்தாரும் சிவப்பிரகாசரும் போன்ற அறிஞர் பெண்டிரைப் பழித்துக் கூறியதெல்லாம், விலைமகளிரின் தீயொழுக்கமும் வீடுபேற் றிற்குத் தடையான உலகக் கவர்ச்சியும்பற்றியே யன்றிப் பெண்பாலின் இழிவுபற்றி யன்று. | இதுகாறுங் கூறியவற்றால், ஆண் பெண்ணாகிய இருபாலும் ஓரன்ன நிலையவென்றும் இருபாலுக்கும் இயற்கையிலேயே பெருமை யில்லை யென்றும், பெண்பாலரிற்போல் ஆண்பாலரிலும் இழிந்தாருண் டென்றும், கற்புடை மனைவியே மனைவியென்றும், காதல் வாழ்க்கையே வாழ்க்கை யென்றும். இல்லற வின்ப வாழ்க்கையை நடாத்துபவர் கணவன் மனைவி யாகிய இருவருமே யாதலின் அவர்க்குப் பிறர் துணை இன்றியமையாத தன்றென்றும், மனப்பொருத்தமே மணப்பொருத்தமென்றும், உண்மையான மணம் கூட்டமேயன்றிக் கரண மன்றென்றும், காதலர் கூடியபின் இறப்பினா லன்றிப் பிரிப்பில்லையென்றும், காதல் வாழ்க்கை மண்ணுலகை விண்ணுல காக்குவதென்றும், இதுவே முன்னைத் தமிழர்கண்ட அன்பு நெறி அகப்பொரு ளின்பவாழ்க்கை யென்றும் அறிந்து கொள்க! | குறிப்பு:-கற்புள்ள மனைவியும் கணவ னிறந்தபின் மறுமணஞ் செய்யலா மென்பது இக்காலக் கருத்தாம். மனைவி யிறந்தபின் கணவன் மறுமணஞ் செய்யும் போது, மனைவிக்கு மட்டும் என்னோ தடை! நாவலந் தேயத்தில் ஆடவராற் பெண்டிர்க்குச் செய்யப்படுங் கொடுமை அளவற்றதாகும். பெண்டிரின் அடிமைத்தனத்தைப் போக்கியபின்பே ஆடவர் தம் அடிமைத்தனத்தைப் போக்கற்பாலர். தொன்றுதொட்டு வரும் பெண்டிரின் அடிமைத்தனமே பெண்பாலைத் தாழ்வாகக் கருதக் காரணமாகும். ஆனால், உண்மையில் இருபாலரும் ஒன்றே. மென்மை யாலாகும் இன்பத்தை யெல்லாம் நுகர்ந்துகொண்டு அதை வன்மையால் ஒடுக்குவது முறையோ? கணவ னிறந்தபின் கற்புடை மனைவி உயிரைத் துறப்பது அளவுக்கு மிஞ்சியதாகக் கருதப்படுகின்றது. கபிலரும், பிசிராந்தையும் பொய்யா மொழியும் போன்ற வன்மைபெற்ற ஆடவரே நட்புரிமை காரணமாகத் தம் நண்பர் இறந்தவுடன் உயிரைத் துறப்பாராயின், மென்மையிற் சிறந்த | | |
|
|