முதற்பதிப்பின் முன்னுரை தமிழ்மொழியில் இலக்கிய ஆராய்ச்சியும் மொழி ஆராய்ச்சியும் இன்று விரைவாக வளர்ந்து வருகின்றன. அவ்விரு துறைகளிலும் பலர் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். உரையாசிரியர்கள், பல ஆண்டுகளுக்கு முன்னரே அவ்விரு துறைகளிலும் நுழைந்து செயற்கரிய செயல்கள் பல செய்துள்ளனர். அவர்கள் ஆராய்ந்து கூறியுள்ள கருத்துக்களை அறிந்து இன்றுவரை வளர்ந்து வந்துள்ள ஆராய்ச்சிக்கு எல்லை கண்டு, மேலும் தொடர்தல் வேண்டும். முன்னோர்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து, இன்றுள்ளவர்கள் தொடங்கினால்தான் ஆராய்ச்சி வளரும்; கருத்துச் சிறக்கும்; புதுமை வெளிப்படும். இன்றேல் சொன்னவற்றையே திரும்பத் திரும்பச் சொல்லி, செய்தவற்றையே மீண்டும் மீண்டும் செய்து இளைக்கும் அவலநிலை ஏற்படும்; தேக்கமும் குழப்பமும் மிகும். ஆதலின் உரையாசிரியர்களின் கருத்துகளை நாம் அறிவது, முன்னேற்றத்திற்கு உறுதுணை செய்யும். ஆராய்ச்சி முடிவற்றது. ஆனால் ஏதேனும் ஒரு முடிவுக்கு வராமல் இருப்பது ஆராய்ச்சியாகாது. புதுமையைப் போற்ற வேண்டும். ஆனால், பழமையைப் புறக்கணிக்கக் கூடாது. பழமையும் புதுமையும் இணைந்தால்தான் ஆராய்ச்சி உலகம் வளரும்; செப்பமடையும்; சிறக்கும். பழமையும் புதுமையும் இணைதல் வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் உரையாசிரியர்கள் என்ற இந்த நூல் தோன்றியதாகும். காலத்திற்கு ஏற்ற புதிய கருத்துகளை இலக்கிய உலகில் நிலவச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான் பழைய இலக்கியங்கள் ஆர்வத்துடன் கற்கப் பெறும். அத்தகைய முயற்சிக்கு ‘உரையாசிரியர்கள்’ என்ற இந்த நூல் உறுதுணை புரியும் என்ற நான் நம்புகிறேன். இந்த நூலை நுணுகி ஆராய்ந்து, அணிந்துரைகள் வழங்கியுள்ள அறிஞர் பெருமக்கள் அனைவர்க்கும் என் உளங்கனிந்த நன்றி உரியதாகும். வித்துவான் திரு. செ. வேங்கடராமச் |