(1) உண்மை, எங்கே எந்த வடிவத்தில் யாரிடத்தில் இருப்பினும், அதனைத் தேடிக் கண்டு பிடித்து வெளியே கொண்டுவந்து, பலர் முன்னிலையில் வைத்துக் காட்டுதல். (2) நடு நிலைமைக்கு ஓர் எடுத்துக் காட்டாய் விளங்கி, காமம் செப்பாது கண்டது மொழிதல். (3) பல வகையில் ஆய்ந்து முடிவைத் திட்டவட்டமாய்க் கூறுதல். (4) கற்போரைக் குழப்பத்தில் ஆழ்த்தாமல், தெளிவாய் - எளிமையாய் அரிய கருத்துக்களை விளக்குதல். (5) படிப்போர்க்கு, சுவையான கதை படிக்கும் போது தோன்றும் இன்ப உணர்வை நூல் முழுதும் உண்டாக்குதல். (6) புதுமையும் எழுச்சியும் எழிலும் அமைந்த கவர்ச்சியான நடையைக் கையாளுதல். பயன் இந்த நூலால் விளைகின்ற பயன்கள் பல. தமிழ் முழுதும் அறிய, இது ஒரு கருவி நூலாய் உள்ளது. இதனைக் கற்றோர், “உரையாசிரியர்களைப் பற்றிய-பழந் தமிழ்த் திறனாய்வுக் கலையைப் பற்றிய கலைக் களஞ்சியம்” என்று பாராட்டியுள்ளனர். உரையாசிரியர்களைப் பற்றி விரிவாக ஆராய இந்த நூல் உறுதுணை புரிந்து வருகிறது. சாதனை ஆரவாரம் மிகுந்த மக்களிடையே வாழ்ந்து கொண்டு-விளம்பரப் புயல் வீசுகின்ற காலச் சூழலில் இருந்து கொண்டு அமைதியாக ஆற்றிய சாதனையின் விளைவே இந்த நூல். பயன் மிகுந்த பணி செய்தோம் என்ற மன நிறைவைத் தருகின்றது இந்த வெளியீடு. ச.மெய்யப்பன் |