பத்து ஆண்டுகளுக்குள், ஆய்வுலகம் வளர்ந்துள்ளது; நூலாசிரியர் சிந்தனை வளர்ந்துள்ளது; தமிழறிந்தவர் ஆர்வம் வளர்ந்துள்ளது; பதிப்பகம் வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிகளின் முத்திரையை இந்த இரண்டாம் பதிப்பில் காணலாம். பாராட்டு பேராசிரியர் டாக்டர் வ.சு.ப மாணிக்கம் அவர்கள் இந்த நூலை, “பல ஆய்வு நூல்களுக்கு மூல நூல்” என்று பலமுறை பாராட்டியுள்ளார்கள். தமிழறிந்தவர் அனைவரும் இதனை விரும்பி வாங்கினர். நூல்கள் விற்பனையின்றி, தேங்கிக்கிடந்த காலத்தில் சிறப்பாக இது விற்பனையாகி எழுச்சி யூட்டியது. இந்த நூல், ஆசிரியரையும் பதிப்பகத்தையும் உலக மெங்கும் நன்கு அறிமுகப்படுத்தியது. சந்தித்தவர் அனைவரும் ஒருமுகமாக இதனைப் பாராட்டினர். இது திறனாய்வாளர்களைக் கவர்ந்து புகழ் பெற்றுள்ளது. சிறந்த நூல்களில் மேற்கோள் காட்டப் பெற்றுப் பெருமை பெற்றுள்ளது. நூலாசிரியர் இந்த நூலின் ஆசிரியர் இயல்பாகவே ஆய்வு வேட்கை மிகுந்தவர்; எத்தகைய கடினமான செய்தியையும் அணுகிச் சிந்தித்துத் தெளிவாக வெளியிடும் ஆற்றல் உடையவர்; “இத்தனை நூல்களையும் இவர் எங்கே தேடிக் கண்டு பிடித்தார்? இத்தனை நூல்களையும் எவ்வளவு காலம் ஆழ்ந்து பயின்று தெளிவு பெற்றார்?” என்று எண்ணும் வகையில் எழுதுபவர். இவர் எழுதியதைவிட அதிகமாய்ச் சிந்தித்துள்ளார்; சிந்தித்ததை விடப் பல நூல்களை ஆழ்ந்து பயின்றுள்ளார்; ஆழ்ந்து பயின்ற நூல்களை விட அதிகமான நூல்களை ஒப்பிட்டு நோக்கியுள்ளார். நம் காலத்தில், உரையாசிரியர்களைப் பற்றிய சிந்தனைக்கு முழுவடிவம் தந்து, அதனை ஒரு கொள்கையாக்கி, ஆய்வுலகில் பரப்பி விட்டார். இந்த நூலின் வாயிலாக ஒரு கருத்துலகத்தைப் படைத்து நம்மை அந்த உலகத்திற்கு அழைத்துச் சென்று பல அரிய காட்சிகளை-கருத்துச் செல்வங்களை விளக்கிக் காட்டுகின்றார். இதுவே நூலாசிரியர் பெற்ற வெற்றியின் இரகசியம். ஆய்வுநெறி இந்த நூலாசிரியரின் ஆய்வுநெறி, பல தனிச்சிறப்பியல்புகளைக் கொண்டது; |