பக்கம் எண் :

7

இரண்டாம் பதிப்பின்

பதிப்புரை

    ‘உரையாசிரியர்கள்’ நூலின் திருத்தமான இரண்டாம் பதிப்பு
வெளிவருகின்ற இந்த நாளில், நூலின் வரலாற்றை எண்ணிப் பார்க்கின்றேன்.

வரலாறு

    1957-ஆம் ஆண்டு பி.ஏ. ஆனர்சு வகுப்பில் நான் பயின்று வந்த
போது ‘உரை ஒப்பாய்வு’ என்ற பாடத்தை, கவிஞராய்- திறனாய்வுக்
கலைஞராய் விளங்கிய திருவாளர் மு. அண்ணாமலை அவர்கள்
கற்பித்தார்கள் “திருக்குறள் உரையாசிரியர்களில் பரிதி, மக்கள் போற்றும்
உரைக் கலைஞர்; மணக்குடவர், பரிமேலழகர்க்குக் கருத்து வழங்கிய
வள்ளல்” என்று பல சிந்தனைவிதைகளை அள்ளித் தெளித்தார். அந்த
விதைகள் என் நெஞ்சக் கழனியில் விழுந்து முளைத்தன. காலம், உரமிட்டு
நீர்பாய்ச்சிப் பயிர் வளர்த்தது.

     தமிழ்உலகில், புகழ்க்குன்றின் உச்சியில் நின்று பேரொளி வீசுகின்ற
உரையாசிரியர்களைப் பற்றிப் பெருநூல் ஒன்றை வெளியிட ஆர்வம்
கொண்டேன். என் ஆர்வம் நிறைவேறும் நாள் வந்தது.

     1967-இல் காலம் கனிந்தது. அப்போது அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்தில் ஆராய்ச்சி மாணவராய் இருந்து, பி.எச்.டி பட்டம் பெற, ஆய்வு
செய்து வந்த திரு. மு.வை. அரவிந்தன் என் கவனத்தைக் கவர்ந்தார். நான்
அவரை அணுகி என் திட்டத்தைக் கூறினேன். தயக்கத்தோடு - அச்சத்தோடு
- பொறுப்போடு அந்தப் பணியைச் செய்து முடிப்பதாய் ஒப்புக்கொண்டார்.
அவருடைய சிந்தனை சொல் பேச்சு மூச்சு யாவும் ‘உரையாசிரியர்கள்’
ஆயின. நூல் தோன்றியது.

     1977-இல், நூலின் திருத்தமான இரண்டாம் பதிப்பு உருவாகி
வெளிவருகின்றது.