பக்கம் எண் :

உரையாசிரியர்கள்112

செல்வங்களைக் கண்டு திளைத்து, அக்கடலின் கரைகளையும் தொட்டு
மகிழ்ந்த புலமைச் செல்வர்களாகிய உரையாசிரியர்களின் உரைநடை,
பெருமிதத்தோடு ஈடும் எடுப்பும் அற்றதாய் இருப்பது இயல்பே. அவர்கள்
கூற எடுத்துக்கொண்ட கருத்துக்கள் எளியவை அல்ல. திட்ப நுட்பம் வாய்ந்த
இலக்கண, இலக்கிய, சமயக் கருத்துகளை எல்லோருக்கும் விளங்கும் வகையில்
கூற இயலாது. மேலும் அவர்கள், பல ஆண்டுகள் முறையாகப் பயின்று
மொழித் திறனும் கருத்துத் தெளிவும் வாய்க்கப்பெற்ற மாணாக்கர்களுக்கு
உரை எழுதினர். இவற்றை நாம் நினைவில் கொண்டு உரையாசிரியர்களின்
உரை நடையை நோக்குதல் வேண்டும்.

     உரையாசிரியர்களின் நடையை, காலத்திற்கு ஏற்ற நடை - கற்ற
புலமைக்கு ஏற்ற நடை - கருத்திற்கு ஏற்ற நடை - கற்பவர் தகுதிக்கு ஏற்ற
நடை என்று மதித்துப் போற்றிக் கற்கவேண்டும். பலப்பல ஆண்டுகளாக
உரை நடையை வளர்த்துச் செப்பனிட்ட பெருமை உரையாசிரியர்களுக்கு
உரியதாகும்.

உரையாசிரியர்களின் உரைநடை

    உரையாசிரியர்களின் பல்வேறு வகையான உரைநடைகளை உற்று
நோக்கிய டாக்டர் மு. வரதராசனார், “உரையாசிரியர் ஒவ்வொருவர்க்கும்
ஒவ்வொரு நடை அமைந்தது; அவர் தம் உரைகளும் ஒவ்வொரு வகையில்
சிறப்புடையனவாக உள்ளன” என்று கூறுகின்றார்.*

     பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், உரையாசிரியர்களின்
உரைநடை இயல்பை ஆராய்ந்து பின்வருமாறு கூறுகின்றார்:

     “இறையனார் அகப்பொருள் உரை ஒரு சிறந்த உரை நடை நூல்.
சூத்திரத்திற்குப் பொருள் கூறுவதோடு சோலை முதலியவற்றைப் பற்றிய
புனைந்துரையும், அன்பு முதலியவற்றைப் பற்றிய தத்துவ விளக்கமும் அங்கு
உண்டு. ஆனால், அங்குப் பாட்டு நடை காதில் கேட்காமல் இல்லை. எதுகை
மோனைகள் அளவுக்குமீறி இன்ப மூட்டுகின்றன.”
1

     “தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியான இளம்பூரணரின் நடை
எளிமை வாய்ந்தது. சேனாவரையரின் இலக்கணவுரையில் புனைந்து கூற
மிகுந்த இடம் இல்லையாயினும், அவரது நடையில் மிகுந்த பொலிவும்
புனைவும் இடம்பெறுகின்றன. திருக்குறள் உரையாசிரியரான பரிமேலழகர்
நடை தெளிவாக


* கலைக் களஞ்சியம் 5, பக்கம் 486.

1. நீங்களும் சுவையுங்கள் (1954) பக்கம், 195.