ஒரு சொல்லைக்கூட எடுத்துவிட்டு அதற்கு இணையாக வேறு ஒரு சொல்லை அமைக்க முடியாது. தேவையற்ற சொல் ஒன்றினையும் இவர் ஆளுவதில்லை.” பரிமேலழகர் உரைக்கு உதாரணம் கீழே தரப்படுகின்றது: “இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், நெறியறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம் பொருள் இன்பம் வீடு என்பன. அவற்றுள் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவது அல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின் நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றும் ஆம். “அவற்றுள், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் ஆம். அஃது ஒழுக்கம் வழக்கு தண்டம் என மூவகைப்படும்.” (உரைப் பாயிரம்) நச்சினார்க்கினியர் சேனாவரையர் உரையில் காணப்படும் தருக்க முறையாக விளக்கும் பண்பையோ, பரிமேலழகர் உரையில் உள்ள செறிவையோ, நாம் நச்சினார்க்கினியர் உரையில் காண இயலவில்லை. கல்வி காரணமாக இவருக்கு ஏற்பட்டிருக்கும் பெருமிதத்தை இவரது உரைநடையில் காணலாம். இவரது உரைநடை எழிலும் எடுப்பும் உடையது; கலைப் பொலிவும் கவிதைச் சுவையும் வாய்ந்தது; கற்போர்க்குப் பேரின்பம் ஊட்ட வல்லது. தமிழ் உரைநடையை வளம் பெறச் செய்தவர் இவர் என்னலாம்; இவரை இலக்கண உரையாசிரியர் என்று கூறுவதை விட, கவிநயம் கண்டு நுண்ணியதாக ஆய்ந்து கூறும் சிறந்த இலக்கிய உரையாசிரியர் என்பது பொருந்தும். இவரது உரைநடையை, இ.மு. சுப்பிரமணிய பிள்ளை பின் வருமாறு புகழ்கின்றார்: “செய்யுள் நடை வாய்ந்த நக்கீரர் உரை நடையும், விளக்கம் குறைந்த இளம்பூரணமும், கட்டுரைச் சுவை செறிந்த சேனாவரையரது இலக்கண நடையும், பொருட் செறிவுடைய பேராசிரியர் உரைநடையும் இவரது உரை நடைக்குப்பின் விளங்குவன அல்ல. ஆயின், நச்சினார்க்கினியர் உரை நடையில் தெளிவும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மேற்கோளும் பொருந்தி இருக்கின்றன.”* * தமிழ் இலக்கியத் திரட்டு (1939) பக். 37. |