அகிலம் காணும் படி, உதறி உடுத்த பட்டுச் சேலையும் பருத்த செங்கழுநீர் மாலையும் திருநுதற் கஸ்தூரி நாமமும் கயல்போல் மிளிர்ந்து காதளவோடிய கடைக்கண் விழியும் ப்ரகாசிக்க, சிலம்பார்ப்ப, சீரார் வளை ஒலிப்ப, அன்னமென்னடை கொண்டு, அணி அரங்கநாதன் திருமுன்பே சென்று கண்களாரக் கண்டு களித்து, கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் பேர்பெற்று உள்ளே புகுந்து, நாகபர்யங்கத்தை மிதித்தேறி, திருவரங்கச் செல்வனைச் சேர்ந்து, அவன் திருவடிகளிலே அந்தர்ப்வித்தருளினார்.” மயிலைநாதர் மயிலைநாதரின் உரைநடை, பரந்த இலக்கிய புலமையில் மலர்ந்துள்ளது. இலக்கியமணம் அதில் கமழும்; இலக்கண நுட்பம் ஒளிவிடும்; தூய்மை நிலவும். நன்னூலின் சிறப்புப் பாயிரத்தில் வரும், கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் திருந்திய செங்கோல் சீய கங்கன் என்ற இரண்டு அடிகளுக்கு மயிலைநாதர் பின்வருமாறு உரை எழுதியுள்ளார்: “கூடாதாரைக் கொன்று கட்டின குரை கழலினையும், பற்றலர் பகரும் பழி மாசு அறுத்து, மற்று உலகு அளிக்கும் மணிமுத்தக் குடையினையும் விளைபயன் கருதாது மேதினியவர்க்கு மழைபோல் உதவும் மாமலர்க் கையினையும், குற்றம் அற்று உலகில் கொடுங்கலி துரந்து செப்பம் வளர்க்கும் செய்ய கோலினையும் உடையவனான தங்கலர் குலமாம் வெங்கயமனுக்கும் சிங்கமாகிய கங்கன் என்பான். சங்கர நமசிவாயர் சங்கர நமசிவாயரின் உரை நடை சிவஞான முனிவரால் போற்றி மேற்கொள்ளப்பட்ட பெருமையுடையது. அதில் தமிழ் மணத்துடன் சைவமணமும் இணைந்து கமழும்; அன்பும் அறனும் எங்கும் வெளிப்படும். பின் வரும் பகுதி இவர் நடையின் இயல்பை விளக்கும்: இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. (குறள்-308) என்புழிப் பிற உயிர்க்கு இன்னா செயின் அவை பிழையாது தமக்கு வருதல் கருதித் தம்மாட்டு அன்பும், பிற உயிர்கள் மாட்டு |