பக்கம் எண் :

உரையாசிரியர்கள்120

அருளும், இன்னா செய்தலான் மேன்மேல் வளரும் பிறப்பு இறப்பின்
அச்சமும் நம்மால் இன்னா செய்யப்பட்டாரை நாம் அடைந்து இரத்தல்
கூடினும் கூடும்; ஆதலால் யார் மாட்டும்  இன்னா செய்யக் கடவேம்
அல்லம் என்னும் வருங்கால உணர்ச்சியும் இலராய் ஒருவர், தன்னால்
ஆற்றக்கூடாத இன்னாதனவற்றைத் தன்கண் செய்தார் ஆயினும் அவர்
தமக்கு வேண்டுவதொரு குறை முடித்தல் கருதி நாணாது தன்னை
அடைந்தாராயின் அவர் செய்த இன்னாமை கருதி அவரை வெகுளாது
அவற்றை மறந்து அவர் வேண்டும் குறைமுடித்து முன்செய்த இன்னாமையால்
அவர் கூசி ஒழுகுதல் தவிர்தற்குக் காரணமாகிய மெய்ப்பாடு முதலியன
தன்கண் குறிப்பின்றி நிகழ அவர்க்கு இனியனாகி இருத்தல் தன் சால்புக்கு
நன்று என நால்வகைச் சொற்களுள் வேண்டுவன எல்லாம் தந்து அகலம்
கூற வேண்டி நிற்பன இசை எச்சமாம் என்க.” (நன்: 360)

சிவஞான முனிவர்

    உயர்ந்த பொருளைப் பற்றி, தெளிவாக விளங்கக் கூடிய வகையில்,
தனித்தமிழில் விளக்கமாக ஆராய்ந்து கூறும் உரைநடைக்கு வித்திட்டு
வளர்த்துப் பரப்பியவர் சிவஞான முனிவர். இவருடைய நடை எப்பொருள்
பற்றியும் தெளிவாகச் சிந்திக்கவும், வன்மையான கண்டனம் எழுதவும் மரபு
வழுவாமல் மொழி பெயர்க்கவும் ஏற்றதாய் உள்ளது. இவர் நடை பின்
வருமாறு:

     “அதிகாரம் - அதிகரித்தல். அஃது இருவகைப்படும். அவற்றுள் ஒன்று,
வேந்தன் இருந்துழி இருந்து தன் நிலம் முழுவதும் தன் ஆணையின் நடப்பச்
செய்வதுபோல ஒரு சொல் நின்றுழி நின்று பல சூத்திரங்களும் பல
ஓத்துக்களும் தன் பொருளே நுதலிவரச் செய்வது. ஒன்று சென்று நடாத்தும்
தண்டத் தலைவர் போல ஓரிடத்து நின்ற சொல் பல சூத்திரங்களோடும்
சென்று இயைந்து தன் பொருளைப் பயப்பிப்பது. இவற்றிற்கு முறையே வட
நூலார் யதோத்தேச பக்கம் எனவும், காரிய காலபக்கம் எனவும் கூறுப. இது
சேனாவரையர் உரையானும் உணர்க.”

ஆறுமுக நாவலர்

    ஆறுமுக நாவலர் பழைய நூல்களுக்கு உரை இயற்றி உரையாசிரியர்
என்ற பெயரைப் பெற்றதோடு, தனியாக உரை நடை நூல்கள் இயற்றிப் புகழ்
பெற்றார். பழங்கால உரைநடையை மாற்றியமைத்துப் புதிய உரை நடைக்குக்
கால்கோள் செய்தார். இவர் உரைநடையில் செய்த மாறுதல்களைப்
பின்வருமாறு வரிசைப்படுத்திக் கூறலாம்: