இரண்டாம் பதிப்பின் முன்னுரை ‘உரையாசிரியர்கள்’ நூலின் முதற்பதிப்பு, 1968-ஆம் ஆண்டில் வெளிவந்தது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் வழங்கிய ஆய்வுகள் நூல் வடிவம் பெற்று வெளி வந்துள்ளன. இந்தியப் பல்கலைத் தமிழாசிரியர் கழகம் பல கருத்தரங்குகளை, பல்வேறு நகரங்களில் நடத்தி, கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. பல்கலைக் கழகங்களும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் சிறந்த ஆய்வுக்களங்களாகச் செயல்பட்டுள்ளன. கல்லூரித் தமிழ் மன்றங்களும், பெரு நகரங்களில் பொதுமக்கள் நடத்திவரும் இலக்கியக் கழகங்களும் சிந்தனை அரங்கமாகி ஆக்கப்பணிகளை ஆற்றியுள்ளன. முதுகலைப் பட்டம் பெற்ற தமிழ் மாணவர்கள் ஒழுங்குபட்ட ஆய்வு நெறிகளை மேற்கொண்டு ஆய்வு நடத்தியுள்ளனர். தமிழ் இதழ்கள், அறிஞர்களின் கட்டுரைகளை வெளியிட்டு ஆராய்ச்சி உலகை விரிவுபடுத்தியுள்ளன. புதுமைக் கவிஞர் பாரதியார், தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்; கண்ணீர்த் துளிவரஉள் ளுருக்குதல்இங் கிவைஎல்லாம் நீஅருளும் தொழில்கள் அன்றோ ? ஒளிவளரும் தமிழ்வாணீ! அடியேற்கு இவையனைத்தும் உதவு வாயே என்று தமிழ்வாணியிடம் முறையிட்டுப் பெற நினைத்த பேறுகளை, தமிழ் ஆய்வாளர் ஒவ்வொருவரும் பெற முயன்று வருகின்றனர். நாள்தோறும் விரிவடைந்து வருகின்ற ஆய்வுலகில் மலர்கின்ற சிந்தனைகள், உரையாசிரியர்களின் உள்ளத்தை |