சிறப்புப் பாயிரத்தில், கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் திருந்திய செங்கோற் சீய கங்கன் (15, 16) என்ற வரிகளுக்கு உரை எழுதும்போது சீயகங்கனை மிகவும் பாராட்டி யுள்ளார். “பல்வகைத் தாதுவின்” என்னும் சூத்திரத்தின் உரைக் கீழ், கங்கனைப் புகழும் இனிய வெண்பா ஒன்றினைக் காட்டுகின்றார். கங்கன் என்ற பெயரை இரண்டு இடங்களில் (110, 275) உதாரணம் காட்டுகின்றார். இவற்றை எல்லாம் நோக்கும் போது நன்னூலை ஆக்குவித்த சீயகங்கனாலோ அவன் வழித் தோன்றல்களில் ஒருவனாலோ மயிலைநாதர் ஆதரிக்கப்பெற்றிருத்தல் வேண்டும். இஃது உண்மையாயின், இவர் வாழ்ந்த இடம் கொங்கு நாடு என்னலாம். உரையின் இயல்பு மயிலைநாதர் எழுதிய உரை, சுருக்கமும் தெளிவும் வாய்ந்தது. சில ஏட்டுப் பிரதிகளின் இறுதியில், “காண்டிகையுரை முற்றிற்று” என்று எழுதப்பட்டிருந்ததாய், இதனைப் பதிப்பித்த டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் குறிப்பிடுகின்றார். ஆழமான நீர்நிலையில் அமைதியாகச் செல்லும் படகு போன்று இவருடைய உரை, நூல் முழுதும் அமைந்துள்ளது. பாயிரவுரை, இறையனார் அகப்பொருள் பாயிர வுரையின் எதிரொலியாக உள்ளது. ஏனைய பகுதிகள் இளம்பூரணர் உரையையும் அவிநய உரையையும் பின்பற்றிச் செல்லுகின்றன. பிறர் கருத்தைச் சுட்டுவதோடு நிற்கும் இவ்வுரையாசிரியர், தம் கருத்தை வலியுறுத்தத் தயங்குவதும் இல்லை: மாறுபட்ட கருத்துகளை மதித்துப் போற்றுவதும் உண்டு. பழைய இலக்கியங்களிலிருந்து சில பாடற் பகுதிகளை உரை நடையாக்கி மேற்கோளாகத் தருகின்றார். நயமான எதுகை மோனைகள் அமைந்த தொடர்களைக் கற்கவும், நினைவில் கொள்ளவும் ஏற்றவாறு அமைத்துள்ளார். வடமொழிக் கருத்துகளை மிகக் குறைவாகவே சுட்டுகின்றார். “வடமொழிக்கு இரண்டல்லாத எல்லாம் பல என்றும், தமிழுக்கு ஒன்றல்லாத பல என்றும் அறிக” (396); “வடமொழி முதலான பிற கலைக் கடல்களுள்ளும்” (459) என்பவை குறிப்பிடத்தக்க இடங்களாகும். உரைத்திறன் மயிலை நாதரின் உரைத்திறனால், நன்னூலார் சுருக்கமாகச் சொல்லியுள்ள சூத்திரக் கருத்து, விளக்கம்பெற்றுச் சிறக்கின்றது. |