இந்த நூல் தோன்றவும் சிறக்கவும் திருத்தம் பெறவும் ஊக்கவுரை கூறி உறுதுணையாய் இருந்த பதிப்புச் செம்மல் தமிழவேள் ச. மெய்யப்பன் அவர்களுக்கு என் நன்றி என்றும் உரியதாகும். தமிழ் நூற்பதிப்பகங்களை நினைக்கின்றபோது, சென்னை நகரம்தான், முதலில் நம் நினைவுக்கு வரும். பல பதிப்பகங்கள், பல ஆண்டுகளாய்ச் சென்னையில்தான் உள்ளன. இந்த நினைவை மாற்றி, சிதம்பரத்திலும் ஒரு பதிப்பகம் உண்டு என்று நினைவூட்டியது மணிவாசகர் நூலகம். ஆராய்ச்சி என்பது ஓய்வு பெற்றவர் செய்ய வேண்டிய பணி என்று இருந்த நிலையை மாற்றியது, மணிவாசகர் பதிப்பகம்; ஆராய்ச்சி மாணவர்களையும் நடுத்தர வயதினர்களையும் ஆர்வமுள்ள இளைஞர்களையும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி, சிறந்த திறனாய்வு நூல்களை வெளியிட்டது மணிவாசகர் பதிப்பகம். அது தனக்கு என்று ஒரு வழியை வகுத்துக் கொண்டு, முறையாகவும் செப்பமாகவும் தரமான நூல்களை வெளியிட்டு வருகிறது. இத்தகைய தனிச் சிறப்புகளை உடைய மணிவாசகர் பதிப்பகம் ‘உரையாசிரியர்கள்’ நூலின் முதற்பதிப்பை வெளியிட்டுச் சாதனை புரிந்தது. இப்போது இரண்டாம் பதிப்பை வெளியிட்டு, முன்பு பெற்ற சாதனைக்கும் வெற்றிக்கும் மெருகு ஊட்டி, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிப் பீடுநடை போடுகிறது. தமிழ் கூறும் நல்லுலகம் இந்த நூலை வரவேற்று, என்னை ஊக்குவிக்கும் என்று நம்புகின்றேன். மு.வை. அரவிந்தன் |