ஆய்வுரைகள் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை நூல், பண்பட்ட ஆய்வுத் திறனைப் புலப்படுத்துகின்றது. பெயரை நோக்கும்போது இந்நூல் உரையாசிரியர்களின் வரலாறுகள் எனக் கருதச் செய்கின்றது. உண்ணுழைந்து ஆராய்வார்க்கு இஃது உரையாசிரியர்களின் கருத்துக் கருவூலமாமென்பது புலனாம். இதன் தெளிந்த உரை நடை, நடை பயிலும் கல்லூரி மாணவர்க்கும் பிறர்க்கும் நன்மாதிரியாய் அமைந்துள்ளமை பெரிதும் பாராட்டத் தக்கது. இதுகாறும் உரையாசிரியர்களின் அளப்பருஞ் சிறப்பினை ஆய்ந்து தெரிவிக்கும் நூல், வெளிவாராப் பெருங்குறையை இந்நூல் நீக்குவதுடன், அரும்பொருள் பலவற்றையும் அள்ளி வழங்கும் வள்ளன்மை யுடையதாயும் திகழ்கின்றது. மலர்தோறும் சென்று மணங்கமழ்தேனைச் சேகரித்துப் பக்குவப்படுத்திப் பலர்க்கும் பயன்படச் செய்யும் தேனீயின் முயற்சியை மானும் செவ்விய முயற்சியை எவ்வயினோரும் போற்றுவர் என்பது திண்ணம். சுருங்கக் கூறின், எதிர்கால ஆராய்ச்சியாளர்க்குக் கருவி நூல்களுள் ஒன்றாகத் திகழும் இந்நூலெனல் சாலவும் பொருந்தும். மு. சண்முகம் பிள்ளை தமிழ் நூற்பரப்பில் உரை நூல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. காலத்தால் முற்பட்ட நூல்களையெல்லாம் வாழவைக்கும் ஓர் அருமருந்தாக இவை திகழ்கின்றன. இறையனார் களவியல் உரையாசிரியர் முதலாக இன்று வாழும் உரையாசிரியர்கள் வரையில் உள்ள பற்பல வகையான நூலுரையாசிரியர்களையும் இந் நூலாசிரியர் அரிதின் ஆராய்ந்து பற்பல செய்திகளையும் புதிய கோணத்தில் அமைத்துத் தந்துள்ளார். |