பக்கம் எண் :

உரையாசிரியர்கள்122

என்று சொன்னார். வைரவர், “அவன் வந்தாலன்றி நாம் உண்ணேம். தேடி
அழைத்து வாரும்” என்றார். அது கேட்டுச் சிறுத்தொண்டரும் மனைவியாரும்
வருத்தமுற்று வெளியே போய், “மைந்தா வாராய்; செய்ய மணியே வாராய்;
சீராளா வாராய்; வைரவர் உன்னோடு அமுது செய்ய அழைக்கின்றார்;
வாராய்; வாராய்” என்று ஓலமிட்டு அழைத்தார்கள். அதுகாலை அம்பலத்தில்
ஆனந்த நடம்புரியும் அருட்பிரகாசரது திருவருளால் சீராள தேவர்
பள்ளியினின்றும் ஓடிவருபவரைப் போன்று வந்தார்.”

உரைநடை வகை

    எல்லாம் செய்யுள் வடிவிலேயே இருந்த இலக்கியவகைகள் உரை
நடைக்கு மாறவும். மாறிப் பலவழிகளில் வளரவும் உரையாசிரியர்கள்
பேருதவி புரிந்துள்ளனர். பழைய உரையாசிரியர்கள் போற்றி வளர்த்த
உரைநடையைப் பற்றி விரிவாக ஆராய்ந்து பெருநூல் ஒன்று எழுதலாம்.
அந்தத் துறை, அவ்வளவு பரந்தும் ஆழ்ந்தும் அமைந்துள்ளது.

     உரையாசிரியர்கள் படைத்துள்ள வாக்கியத்தின் செப்பமும், நடை
நலமும் கற்போரைப் பெரிதும் கவர்கின்றன. அவற்றின் இயல்புகளை -
பலவேறு வகையான வாக்கிய அமைப்புகளைக் காண்போம்:

     1. முன் வாக்கியத்தின் முடிவில் உள்ள சொல்லே, அடுத்த
வாக்கியத்தின் தொடக்கத்தில் அமைந்த அந்தாதி நடை ஒரு வகை. இந்த
வகை இறையனார் களவியல் உரையில் மிகுதியாக உள்ளது.

     2. ஒரு பத்தி  முழுதும் ஒரே வாக்கியமாய் நீண்ட தொடராய்ச்
சங்கிலிபோல் அமைதல் மற்றொரு வகை. அடியார்க்கு நல்லார் உரையிலும்
யாப்பருங்கல விருத்தியுரையிலும் இத்தகைய வகை உண்டு.

     3. எதுகை மோனைகள் அமைந்து, சீரமைப்பில் சிறந்து, ஓசை நயம்
பெற்று ஆசிரியப் பாவாய் - வஞ்சிப் பாவாய் அமையத்தக்க, பா நடை
உண்டு. களவியல் உரையும் காளிங்கர் (திருக்குறள்) உரையும் பல
இடங்களில் பா நடை உடையவை.

     4. கண்ணுக் கினிய காட்சி, சிந்தைக் கினிய கருத்து, எண்ணி
மகிழத்தக்க நிகழ்ச்சி ஆகியவற்றைக்கொண்ட சொல்லோவியங்கள் உடைய
நடை உண்டு. பேராசிரியர் உரையும் களவியலுரையும் இத்தகைய நடையில்
அமைந்தவை.