பக்கம் எண் :

123அறிமுகம்

     5. அரசு ஆணை போன்ற-சட்ட மொழிகளால் அமைந்த-திட்ப நுட்பம்
எளிமை தெளிவு ஆகியவற்றைக் கொண்ட-தருக்க நெறி தழுவிய செறிவு
நடை உண்டு. பரிமேலழகர் சேனாவரையர் சிவஞான முனிவர் ஆகியோர்
உரைகள் இத்தகைய நடை நலம் வாய்ந்தவை.

     6. சின்னஞ்சிறு சொற்களும் அங்கங்கே முடிந்துவிடும்துண்டு
வாக்கியமும் கொண்ட நடை உண்டு. இதனை நச்சினார்க்கினியர் உரையில்
காணலாம்.

     7. எளிமையை உயிர்ப்பண்பாகக் கொண்ட தெளிவான பொருள்
புலப்பாட்டை இயல்பாக உடைய ஆரவாரம் சிறிது மற்ற எளிய நடை உண்டு.
இதனை இளம்பூரணர் மணக்குடவர் மயிலைநாதர் ஆகியோரிடம் காணலாம்.

     8. வட சொல்லும் தமிழ்ச் சொல்லும் கலந்த மணிப்பிரவாள நடை
உண்டு. நாலாயிர திவ்வியப் பிரபந்த வியாக்கியானங்கள் இந்த நடையில்
அமைந்தவை.

வாழையடி வாழை

    இந்த வகைகள் அனைத்தையும், உரை நடை சிறந்து விளங்குகின்ற
இருபதாம் நூற்றாண்டு உரை நடை நூல்களில் காணலாம். இன்றைய உரை
நடைக்குப் பழந்தமிழ் உரைகளே ஆணிவேர்; அடிப்படை. நமக்கு முன்
வாழ்ந்த உரைநடை எழுத்தாளர்கள், உரையாசிரியர்களை வழி காட்டிகளாய்க்
கொண்டு அவர்கள் நடையைப் பின் பற்றியுள்ளனர்.

     இறையனார் களவியலுரையைத் திரு.வி.க., ரா.பி. சேதுபிள்ளை, டாக்டர்
மு.வ. ஆகியோர் பின்பற்றியுள்ளனர். இளம்பூரணர் நடையை டாக்டர் உ.வே.
சாமிநாத ஐயரும் ஆறுமுக நாவலரும் போற்றியுள்ளனர். சேனாவரையர்
நடையை மறைமலையடிகள் பரிதிமாற் கலைஞர் சோமசுந்தர பாரதியார்
ஆகியோர் தழுவியுள்ளனர். பேராசிரியர் நடை விநோத ரசமஞ்சரி இயற்றிய
வீராசாமிச் செட்டியார் விபுலாநந்தர் ஆகியோர் நடையில் எதிரொலிக்கின்றது.
பரிமேலழகர் நடை, பண்டித மணியிடமும் ந.மு. வேங்கடசாமி நாட்டாரிடமும்
வெளிப்படுகின்றது. மணிப்பிரவாள நடை செல்வக் கேசவராய முதலியார்
கல்கி போன்றவர்களிடம் அமைந்துள்ளது.

     இவ்வாறு, நம் காலத்திலும் உரையாசிரியர்கள் செல்வாக்குடன் ஆட்சி
செலுத்தி வருகின்றனர்; அவர்கள் நடை, ஆணையிட்டுத் தமிழை இயக்கி
வருகின்றது.