பக்கம் எண் :

உரையாசிரியர்கள்124

6. உரையும் திறனாய்வும்

    முற்காலத்தில் புதிய நூல் இயற்றிய ஆசிரியர் தமிழறிந்த மன்னன்
தலைமை தாங்கிய புலவர் பேரவையில் தம் நூலைப் படித்துக் காட்டிப்
பொருளை விளக்கிக் கூறுவார். அப்போது தேவையான இடங்களில் அவைப்
புலவர்கள் வினா எழுப்புவர்; அதற்கு நூலாசிரியர் விடை கூறுவார். திருத்த
வேண்டிய-மாற்ற வேண்டிய பகுதி இருப்பின் அவையோர் சுட்டிக்காட்டிக்
குற்றங்குறைகளை நீக்குவர். நூல் திருத்தம் பெற்றபின் அவையோர் அந்த
நூலை ஏற்பர்; அதன் அருமை பெருமைகளை விளக்கியும், அதனை
இயற்றியவர் புலமைத் திறனைப் போற்றியும் சாற்றுக் கவிகள் வழங்குவர்.
சாற்றுக் கவிகள் பெற்ற நூலே நல்ல நூல் என்று பலராலும்
கொண்டாடப்படும்; நாடெங்கும் பரவும்; பள்ளிதோறும் பயிலப்படும்;
மாணவர் உலகம் கற்றுப் பயனடையும்.

     நூல் அரங்கேற்றம் பற்றி வி. நா. மருதாசலக் கவுண்டர் பின்வருமாறு
விளக்கிக் கூறியுள்ளார்:

     “முற்காலத்தில் நூல் அரங்கேற்றம் என்பது, இக்காலத்தில் நூல்
மதிப்பீடு எனப் பெரும்பாலும் மாறி வருகின்றது. முற்காலத்தில் செய்யுள்
நூல்கள் அரங்கேற்றப்படும் (மதிப்பீடு செய்யப்படும்) வழக்கம் இருந்து
வந்தது. நல்லிசைப் புலவர்கள், அவைக்கு வரும் நூல்களை நுணுகி
ஆராய்ந்து அவற்றின் பொருட் செவ்விகளைத் தம் அறிவென்னும்
துலாக்கோலில் இட்டு மதிப்பிட்டனர். நூலின் அரங்கேற்றத்தால் நூல்களை
நுணுகி ஆராயும் முறைமையும், சிறந்த பகுதிகள் இவை; சிறவாத பகுதிகள்
இவை எனப் பகுத்துக் காட்டும் நெறியும், நூலின் முழுத் தகுதியும் காணும்
நல்ல ஆராய்ச்சி நெறி முறையும் செவ்விதின் நாட்டப் பெற்றன. அரங்கேற்ற
வழி வகைகளால் நூல்கள் நுணுகி ஆராயப் பட்டன; நல்லன விரும்பிக்
கொள்ளப் பட்டன; அல்லன வெறுத்துத் தள்ளப்பட்டன”*

     நூல் அரங்கேறும் அவையே திறனாய்வுக்களமாக அக்காலத்தில்
விளங்கியது. நூல் அரங்கேற்றம் பற்றியும், அரங்கேறும்போது நடந்த
நிகழ்ச்சிகள் பற்றியும் அபிதான சிந்தாமணி, விநோதரச மஞ்சரி, உ.வே.
சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு, அவரது மற்ற உரை நடை நூல்கள்
ஆகியவை விளக்கமாகக் கூறுகின்றன. நூல் அரங்கேற்றத்தின்போது எழுந்த
வினா விடைகள், சிறந்த திறனாய்வுகளாய் உள்ளன.


 * புலமை நூல் (1952) பக்-207, 209, 211.