பக்கம் எண் :

125அறிமுகம்

     மூல நூல்களைப்போலவே உரையும் அரங்கேற்றப்பட்ட செய்தியை
நச்சினார்க்கினியரின் சிந்தாமணி உரை பற்றிய வரலாறு வாயிலாக அறிய
முடிகின்றது. முதன் முறை அவர் இயற்றிய உரையை ஜைன சமயப்
புலவர்கள் ஏற்க மறுத்தனர் என்றும், பின்னர் அவர் ஜைன சமய நூல்களை
ஆழ்ந்து பயின்று மறுமுறை எழுதிய உரையை ஜைன சமயச் சான்றோர்
பாராட்டி ஏற்றனர் என்றும், இரு வேறு உரைகள் எழுதப்பட்டமைக்குச்
சான்றுகள் உள்ளன என்றும் டாக்டர் உ.வே.சா. கூறுகின்றார்.

     இலக்கிய இலக்கணங்களைக் கற்றவர்களும், அவை பற்றிய
மதிப்புரைகளைக் காலந்தோறும் செய்யுள் வடிவில் எழுதிச் சென்றுள்ளனர்;
நூலியற்றிய புலவர்களைப் போற்றிப் பாடியுள்ளனர். பத்துப் பாட்டிலும்
சிலப்பதிகாரத்திலும் உள்ள வெண்பாக்கள், சுவைத்தவர் வியந்து பாடியவை.
திருவள்ளுவ மாலை, திருக்குறள் இன்பத்தில் மூழ்கித் திளைத்தவர் இயற்றிய
வெண்பாக்களின் தொகுப்பு. நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள
தனியன்கள் ஆழ்வார்களைப் புகழ்கின்றன. கம்பர் புலமைத் திறனைப்
புகழும் தனிப் பாடல்கள் பல உள்ளன. குமரகுருபரர், தாயுமானவர்,
வள்ளலார் ஆகியோர் தம் நூல்களில் தமக்கு முன் இருந்த அருட்
கவிஞர்களைப் பலவாறு புகழ்ந்துள்ளனர். நால்வர் நான்மணிமாலை,
தமிழ்விடு தூது ஆகியவை புலவர்களையும் அவர்தம் பாநலனையும்
பாரட்டும் இனிய நூல்கள். தனிப்பாடல்கள் இயற்றிய புலவர்களைப் போற்றும்
சிறந்த பாடல்கள் உள்ளன. பாரதியாரைப் பற்றி, பாரதிதாசன் கவிமணி
நாமக்கல்லார் போன்ற கவிஞர்கள் போற்றிப் பாடியுள்ளனர்.

     இவையேயன்றி, தொல்காப்பியம் நன்னூல் ஆகிய இலக்கண
நூல்களையும், உரையாசிரியர்களையும் போற்றியவர் உள்ளனர்.
மயிலைநாதரும் மற்ற உரையாசிரியர்களும் இப்பணியைச் செய்து சிறப்பு
எய்தியுள்ளனர்.

     இவை யாவும் “போற்றும் திறனாய்வு” (Appreciative criticism)
வகையைச் சேர்ந்தவை.

     முற்காலத்துத் திறனாய்வின் வகைகளையும் முறைகளையும்
அறிவிக்கின்ற சொற்கள் பல உள்ளன. நூல்நயம், பா நயம், செய்யுள்நலன்
பாட்டுத்திறன் போன்ற தொடர்கள் உள்ளன. ஆய்வு ஆராய்ச்சி நோக்கு
போன்ற சொற்கள் உள்ளன. சுவை அழகு நடை ஆழம் திட்பநுட்பம் செறிவு
போன்ற சொற்கள் உள்ளன. மரபு முறை வழக்குநெறி போன்ற சொற்கள்
உள்ளன. இச் சொற்கள் ஆளப்பட்டுள்ள இடங்களை எல்லாம் தேடிக்