பக்கம் எண் :

உரையாசிரியர்கள்126

கண்டு தொகுக்க வேண்டும் அவற்றிற்குப் பொருள்விளக்கம் காண வேண்டும்.

     நூலில் அமைய வேண்டிய பத்து அழகுகளைத் தொகுத்துக்
கூறியவர்கள் சிறந்த திறனாய்வாளர்களே.

          சுருங்கச் சொல்லல்
         விளங்க வைத்தல்
         நவின்றோர்க்கு இனிமை
         நன்மொழி புணர்த்தல்
         ஓசை யுடைமை
         ஆழம் உடைத்தாதல்
         முறையின் வைப்பே
         உலக மலையாமை
         விழுமியது பயத்தல்
         விளங்கு உதாரணத்தது ஆகுதல்

என்று அவற்றை நன்னூல் அடுக்கிக் கூறுகின்றது. நூலில் இடம் பெறக்
கூடாத பத்துக் குற்றங்கள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன:

          குன்றக் கூறல்
         மிகைபடக் கூறல்
         கூறியது கூறல்
         மாறுகொளக் கூறல்
         வழுச்சொற் புணர்த்தல்
         மயங்க வைத்தல்
         வெற்றெனத் தொடுத்தல்
         மற்றொன்று விரித்தல்
         சென்றுதேய்ந்து இறுதல்
         நின்று பயனின்மை.

இவை யாவும் திறனாய்வு உலகில் பயன்படவேண்டிய அருமையான கலைச்
சொற்கள்.

     இவையேயன்றி திறனாய்வுடன் தொடர்புடைய பகுதிகள் உள்ளன.
‘பாட்டு ஆராய்ந்தான்’ என்ற தொடரை உதாரணம் காட்டுகின்றார்
இளம்பூரணர் (எழுத்-195). திருக்குறளுக்கு உரை கண்ட பதின்மரைக்
குறிப்பிடுகின்ற வெண்பா, அவர்கள் ‘எல்லைஉரை’ கண்டதாகக் கூறுகின்றது.
மிகாமலும் குறையாமலும் அளவோடு அமைந்த உரை என்ற கருத்தை
‘எல்லை உரை’ என்ற தொடர் கொண்டுள்ளது.

          ஆயும் தொறும் தொறும் இன்பம் தரும் தமிழ்

என்ற சான்றோர் வாக்கு எண்ணிப் பார்க்கத் தகுந்ததாகும்.