பக்கம் எண் :

உரையாசிரியர்கள்136

கபிலர் பாடியுள்ளார். அப்பூக்கள் ஒரே இடத்தில் கிடைப்பவை அல்ல;
ஐந்து நிலங்களிலும் பூப்பவை. ஒரு பருவத்தில் பூப்பவை அல்ல; ஆறு
பருவங்களிலும் பூப்பவை. ஒரே நேரத்தில் பூப்பவை அல்ல; சில காலையிலும்
சில மாலையிலும், சில நண்பகலிலும், சில நள்ளிரவிலும் பூப்பவை. இவ்வாறு
நிலம் பருவம் சிறுபொழுது ஆகிய மூன்றிலும் ஒற்றுமைப் பட்டு மலராத
பூக்கள், மலை நிலத்தில்-கார் காலத்தில்-நண்பகலில் பூத்திருந்தன என்று
கூறுவது பொருந்தாது. இதனை ஆராய்ந்து பார்த்த நச்சினார்க்கினியர்,
‘எந்நில மருங்கின்’ என்னும் அகத்திணை (19) நூற்பா உரையில், “கபிலர்
பாடிய பெருங் குறிஞ்சியில் வரைவின்றிப் பூ மயங்கியவாறு காண்க” என்று
குறிப்பிடுகின்றார்.*

     சிந்தாமணிக் காப்பியத்தில், திருத்தக்க தேவர்க்குப் பெருமைதரும்
வகையில், நச்சினார்க்கினியர் உரை கண்டுள்ள இடங்கள் சில உள்ளன.

     பதுமையைப் பாம்பு தீண்டிய செய்தியைச் சீவகனுக்குக் கூறுபவன்,
முதலில் தான் கூற வேண்டிய செய்தியை விரைவிற் சொல்லாமல், பதுமையின்
பிறப்பு வளர்ப்புகளை உரைத்து, பிறகு அவள் முல்லைக்கொடி வளர்த்த
நிகழ்ச்சியைக் கூறி, கொடி அருகே பதுமை சென்றபோது பாம்பு தீண்டிற்று
என்ற செய்தியை உரைக்கின்றான். இவ்வாறு உரைப்பது
உலகியலுக்குமாறாய்-மக்கள் இயல்புக்குப் பொருத்தமற்றதாய் உள்ளது.

     இதனை உணர்ந்து நச்சினார்க்கினியர், பல பாடல்களை ஒருதொடராக்கி,
“இது (1266) முதலாகப் ‘பதுமை’ என்னும் கவியளவும் (1273) ஒரு தொடர்”
என்று குறிப்பிட்டு, பாம்பு தீண்டிய செய்தியை முதலில் கூறுவதாய் அமைத்து
மற்றச் செய்திகளைப் பின்னர் உரைக்கின்றார். நூலாசிரியர் கருத்திற்கு
மாறாகத் தாம் உரைப்பதற்குக் காரணமும் கூறுகின்றார். “இங்ஙனம்
மாட்டுறுப்பாகக் கடுகக் கூறாது செவ்வனே கூறின், பாம்பு கடித்தமை கடுகக்
கூறிற்று ஆகாமை உணர்க.” என்று அமைதி கூறுகின்றார்.

     மேலும், “திங்கள் வாள் முகமும் நோக்கான்” (1705) என்ற பாடலுக்கு
நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரை விளக்கம் திருத்தக்க தேவரை
உயர்த்துகின்றது.

     மூல நூல்களில் உள்ள குற்றங்குறைகளுக்கு அமைதி கூறி,
முரண்களைச் சரிசெய்வதைச் சிலர் விரும்புவதில்லை. அவர்களில் பாவேந்தர்
பாரதிதாசனும் ஒருவர். அவர்,


* இக் கருத்து, களவியலுரையில் கூறப்பட்டுள்ளது.