பக்கம் எண் :

137அறிமுகம்

     பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம்
     பணிக்கையிடல் போல்
                                        குடும்ப விளக்கு - 1

என்ற உவமை வாயிலாகத் தம் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

காப்பியத் திறனாய்வு

    சிவப்பிரகாசர், முந்தையோர் செய்யுளைத் திருக்கோயிலுக்கு உவமை கூறுகின்றார். இந்த அரிய உவமை நம் சிந்தனையைத் தூண்டுகின்றது:

          சந்தி பொருத்தி, தகும்சீர் கெடாது அடுக்கி,
          புந்தி மகிழ் அற்புத அணித்தாய்-முந்தையோர்
          செய்யுள் போல் செய்த திருக்கோயில்
                                        (திருவெங்கையுலா)

என்று செய்யுளையும் கோயிலையும் ஒப்பிட்டு உரைக்கின்றார்.

     பெருங்கோயில்களைக் கட்டுவோர். நல்ல கற்களைத் தேர்ந்தெடுத்து
வைத்து, இடைவெளி தோன்றாமல் சந்தி பொருத்துவர்; சீர் (வரிசை)
கெடாமல் அடுக்குவர்; காண்பவர் உள்ளம் மகிழுமாறு அற்புதமான அழகிய
சிற்பங்களையும் ஓவியங்களையும் உருவாக்குவர். பெருங்காப்பியம் இயற்றும்
கவிஞர்கள் சிறந்த சொற்களை ஆராய்ந்தெடுத்துச் சந்திப்பிழை தோன்றாமல்
பொருத்துவர்; சீர்கெடாது அடுக்குவர்; கற்போர் உள்ளம் களிக்குமாறு
அற்புதமான அணிகளை அமைப்பர். ஆதலின் திருக்கோயில், முந்தையோர்
செய்யுள் போல் பொலிகின்றது. பெருங்கோயிலைக் காணும்போது ஏற்படும்
இன்பம், பெருங்காப்பியம் கற்கும் போதும் ஏற்படுகின்றது.

     வரலாற்றுச் சிறப்பும் பழம் பெருமையும் கலை வளமும் உடைய
பெருங்கோயிலின் பலவேறு பகுதிகளை நன்கு அறிமுகப்படுத்தி அழைத்துச்
செல்லும் சிறந்த வழிகாட்டிகளைப் போல், பெருங்காப்பியத்திற்கு உரை
எழுதிய சான்றோர்கள் கற்போர்க்குத் துணை செய்கின்றனர். அவர்கள்
காப்பியத்திறனாய்வு நெறியில், தலைசிறந்து விளங்குகின்றனர். கதை நிகழ்ச்சி
முழுவதையும் எவ்விடத்திலும் மறவாமல் இருக்கின்றனர். முன் பின்
நிகழ்ச்சிகளைத் தொடர்படுத்தி முரண்பாடுகளை அகற்றுகின்றனர்; கதை
நிகழ்ச்சிகளுக்குரிய இடம் காலம் ஆகியவற்றை ஆராய்ந்து
தெளிவுபடுத்துகின்றனர். காப்பியத்தில் உள்ள சின்னஞ்சிறு குறைகளையும்
மாசுகளையும் நீக்கி நிறைவு செய்கின்றனர். காவியமாந்தரின் பண்புகளை
ஆராய்கின்றனர். கவிஞரின் சொல்லழகில் ஈடுபட்டு, உவமைகளைச் சுவைத்து,
கற்பனையில்