திளைத்து இயற்கைக் காட்சிகளில் மூழ்கி இலக்கிய இன்பத்தை வெளிப்படுத்துகின்றனர். காப்பியம் முழுவதும் ஊருவிக்கிடக்கின்ற உட்கருத்தை உரையாசிரியர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். காப்பியப் பண்பைத் தண்டியலங்காரம், பாவிகம் என்பது காப்பியப் பண்பே என்று குறிப்பிடுகின்றது. இதனை, உரை பின்வருமாறு விளக்குகின்றது: “பாவிகம் என்பது பொருட்டொடர் நிலைச்செய்யுள் திறந்து, கவியாற் கருதிச் செய்யப்படுவதொரு குணம். அஃது, அத்தொடர்நிலைச் செய்யுள் முழுவதும் நோக்கிக் கொள்ளப்படுவது அல்லது, தனித்து ஒரு பாட்டில் நோக்கிக்கொள்ளப் புலப்படாதது.” காப்பியப் பண்பை உரையாசிரியர்கள் உணர்ந்து விளக்கியுள்ளனர். அடியார்க்கு நல்லார், சிலப்பதிகார உரையில் ‘பத்தினியைப் பரவுதலே காப்பியத்தின் உட்கோள்’ என்று உரைக்கின்றார். பிள்ளை லோகாசாரியர் ‘இராமாயணம் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது’ என்றும், மகாபாரதம் ‘தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது’ என்றும் கூறுகின்றார். உரையாசிரியர்கள் இலக்கண இலக்கிய உலகங்களின் வழிகாட்டிகள். தொண்டை மண்டலச் சதகம் (41) பரிமேலழகரைக் குறிப்பிடும்போது, திருக் காஞ்சிவாழ் பரிமேலழகன் வள்ளுவர் நூற்கு வழிகாட்டினான் என்று கூறுகின்றது. பரிமேலழகரைப்போலவே எல்லா உரையாசிரியர்களும் நல்ல வழிகாட்டிகளாய் உள்ளனர்! ஒப்பியல் ஆய்வு ஒப்பியல் ஆய்விலும் உரையாசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் காலத்தில் வடமொழி ஒன்றே தமிழுடன் கலந்து உறவாடியது. தமிழ்ப் புலவர்கள், வடமொழி இலக்கண இலக்கியங்களையும் சாத்திரங்களையும் கற்று, அவற்றிலுள்ள கருத்துக்களைத் தமிழுடன் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளனர். சேனாவரையர், (வீரசோழிய உரையாசிரியராகிய) பெருந்தேவனார், சாமிநாத தேசிகர், சிவஞான முனிவர் ஆகியோர் தம் உரைகளில் வடமொழி இலக்கணத்தைத் தமிழுடன் ஒப்புமை காட்டி விளக்கியுள்ளனர். எழுத்து பெயர்ச்சொல் வேற்றுமை |