வினைச்சொல் ஆகியவை பற்றிய உரைகளில் வடமொழிக் கருத்துக்கள் நினைவூட்டப்படுகின்றன. பேராசிரியர் அடியார்க்கு நல்லார் ஆகியோர் தம் உரைகளில், மெய்ப்பாடு அணி தொனி நாடகப் பண்பு காப்பிய இயல்பு ஆகியவற்றை விளக்க வடமொழி நூல்களிலிருந்து கருத்துக்களை எடுத்துரைக்கின்றனர். பரிமேலழகர் அறம் பொருள் இன்பம் பற்றிய வடநூற்கருத்துக்களையும், சமய உண்மைகளைக் கூறும் வடமொழிச் சாத்திரங்களையும், அரசியலைப் பற்றிக் கூறும் வடமொழி நூல்களையும் உரைகளில் குறிப்பிட்டு அவற்றின் கருத்துக்களைத் திருக்குறளோடு ஒப்புமை காட்டுகின்றார். நச்சினார்க்கினியரும் சமயக் கருத்துக்களை விளக்குதற்கு வடநூற் கருத்துகளை ஒப்புமை காட்டுகின்றார். உரையாசிரியர்கள் ஒப்புமை காட்டுகின்ற பகுதிகளில் சில பொருத்தமில்லாதவை; தமிழுக்கு முரணானவை; தேவையற்றவை. என்றாலும் அவர்கள் இருமொழிக் கருத்துக்களில் வேற்றுமையும் கண்டுள்ளனர். கண்டு, தம் உரைகளில் விளக்கியுள்ளனர். பரிமேலழகர், மானத்தைப் பற்றிக் கூறும்போது (961), ‘இறப்ப வருவழி இளிவந்தன செய்தாயினும் உய்க என்னும் வடநூல் முறையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும் மானத்தினது நிலையுடைமையையும் தூக்கி அவை செய்யற்க என்பதாம்’ என்று கூறியுள்ளார். நச்சினார்க்கினியர் களவியலுரையில் (1), கற்பின்றிக் கந்தருவம் அமையவும் பெறும் என்றும், கற்பின்றிக் களவு அமையாது என்றும் வேறுபாட்டை உணர்த்துகின்றார். ‘இலக்கணக்கொத்து’ நூலை இயற்றிய சாமிநாததேசிகர், வடமொழிக்கும் தமிழுக்கும் உள்ள வேறுபாட்டைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: இருதிணையும், ஆண்பால் பெண்பால் வினை ஈறும் வடமொழிக்கு இல்லை. மூன்று இலிங்கமும், முதலீற்று வேற்றுமைகட்கு உருபுகளும் தமிழிற்கு இல்லை (இலக்.7) சுப்பரிமணிய தீட்சிதர், ‘பிரயோக விவேகம்’ நூலில், சாற்றிய தெய்வப் புலவோர் மொழிக்கும் தமிழ்மொழிக்கும் வேற்றுமை கூறின், திணைபால் உணர்த்தும் வினைவிகுதி |