“நச்சினார்க்கினியர் காலத்திலேதான் மதிப்பீட்டுத் துறையில் அருமை பெருமைகள் செழிந்தோங்கி வளர்ந்தன. தமிழ் உரைநடை அவர் காலத்திலே சிறந்து வளர்ந்த படியால் அவருடைய கலையறிவும் உலகியல் அறிவும் மதிப்புரை வழக்குவதில் புலனாயின. முற்கால உரையாசிரியர்களுள், கருத்துக்களைச் சீர்தூக்கும் மதிப்பாளரில் (critics) நச்சினார்க்கினியர் தலைசிறந்தவர். “பிற்காலத்தவருள் அவஞானம் போக்கும் சிவஞான முனிவர் ஒருவரே மதிப்பாளர் உலகில் உச்ச நிலை அடைந்தவர் ஆவர்.” உரையாசிரியர்கள், தமக்கு முன் இருந்த உரைகளை ஆழ்ந்து கற்றனர். அவற்றில் இருந்து நல்லனவற்றை எடுத்துக்கொண்டனர்; சுருக்கமாய்க் கூறியிருந்த கருத்தை விரிவுபடுத்தினர்; எளிய நடையை மாற்றி வலிவும் வனப்பும் உடைய நடையை அமைத்தனர். முன்னோர் கூறியிருந்த மாறான கருத்தை-தவறான விளக்கத்தை உரையாசிரியர்கள் நீக்கிவிட்டனர். மறுக்க வேண்டிய கருத்தை எடுத்துரைத்துத் தக்க காரணங்களைக் காட்டி மறுத்தனர். மறுக்கும்போது ஆசிரியர் கருத்திற்கு மாறானது என்று நூலிலிருந்தே சான்று காட்டினர்; மரபுக்கு ஒவ்வாது என்று நினைவூட்டினர்; பிற நூல்களிலிருந்த மேற்கோள் காட்டித் தம் கருத்திற்கு அரண் செய்தனர்; இலக்கணக் கொள்கையை - சொற்பொருளை எடுத்துரைத்துத் தம் கருத்தை நிலைநாட்டினர். பிறர் கருத்தும் கொள்ளத் தகுந்ததே என்று கருதினால் உரையாசிரியர்கள், அதைக் கூறி ‘என்ப, என்பதும் ஒரு கருத்து, என்று கூறுப’ என்று உரைத்தனர்; பல வேறு பொருள்களைத் தந்து ‘இவை பொருந்துமாயின் கொள்க’ என்றனர். மூலநூல் மறுப்பு மூல நூலையே மறுத்து அதில் உள்ள குற்றங் குறைகளை எடுத்துக்காட்டியவர் சிவஞான முனிவர். ‘இலக்கண விளக்கம்’ என்னும் நூலை மறுத்து, அவர் இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றினார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் உள்ள உரைநடையில் பல மறுப்புரைகள் வெளிவந்துள்ளன. அவற்றுள் பெரும்பான்மையானவை சமயச் சார்பானவை; இலக்கணத் தொடர்புடையவை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செந்தமிழ் இதழில் இலக்கண மறுப்புக் கட்டுரைகள் தொடர்ச்சியாய் |