வந்துள்ளன. சில பாடல்களுக்குப் பொருத்தமான பொருள் எது என்ற புலமைப் பூசலில் மலர்ந்தன சில ஆய்வுகள்; பொருத்தமான பாடம் தேர்ந்தறியும் முயற்சியில் தோன்றின சில படைப்புகள். இவற்றை எல்லாம் தொகுத்தால் ‘ஆராய்ச்சிக் களஞ்சியம்’ தமிழுக்குக் கிடைக்கும்; ஆய்வுலகில் ‘புலமைப் புதையல்’ வெளிப்படும். இருமொழிப் புலமையின் விளைவு தமிழோடு வடமொழியோ, ஆங்கிலமோ பயின்ற புலமைச் செல்வர்களுக்கு, பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் என்று பாரதியார் வேண்டுகோள் விடுத்தார். இருமொழிப் புலமையாளர்கள், தமிழ் மொழியை வளப்படுத்தப் பிற மொழிப் புலமையைப் பயன்படுத்தல் வேண்டும். பிற மொழியில் எழுத்தும் சொல்லும் பயின்றதோடு நில்லாமல், பொருளும் அறிந்து நல்லனவற்றைத் தமிழுக்குக் கொண்டு வருதல் வேண்டும். அதுதான் இருமொழிப் புலமையின் பயன். அவ்வாறு செய்யாமல், தமிழுக்கு எந்த அளவிலும் நன்மை செய்யாது, பிறமொழிப் புலமையை எண்ணி எண்ணித் தம்மைத் தாமே வியந்து கொள்வதில் பயனில்லை! தமிழ் ஒன்றையே முறையாக-செப்பமாக-ஆழ்ந்து கற்றவர்களால் தமிழுக்கு ஏற்படும் பயன்கள் கூட இருமொழிப் புலமையாளர்களால் ஏற்படா. பன்னெடுங் காலமாகத் தமிழ் நாட்டில் வட மொழியும் தென் மொழியும் பயின்றவர்கள் பலர் இருந்திருக்கின்றனர். அவர்கள் தமிழ் மட்டும் அறிந்தவர்களிடம் வடமொழிக் கருத்தைக் கூறி மருட்டினர்; வடமொழி அறிந்தவர்களிடம் தமிழ்க் கருத்தை எடுத்துரைத்து மயக்கினர். இந்த நிலையைத் தாயுமானவர், ...வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்தி்லே வந்ததா விவகரிப்பேன் வல்லதமிழ் அறிஞர்வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன்; வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகைவந்த வித்தை என் முத்தி தருமோ! சித்தர்கணம்: 10. என்று தம் மீது ஏற்றிக் கூறி நகைக்கின்றார். அவர்களை நோக்கி, |