கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக, கடபட என்று உருட்டுதற்கோ ? என்று வினவுகின்றார். இருபதாம் நூற்றாண்டிலும் இந்த அவல நிலைவெல்லாமல் எவரையும் மருட்டுகின்ற வித்தை நிலவி வந்தது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலம் பயின்ற தமிழர்கள், ஆங்கிலத் திறனாய்வு நூல்களைக் கற்று, தமிழ் மட்டும் வல்ல புலவர்களைக் குறை கூறினர். ஆனால், ஆங்கிலேயர்களிடம் தமிழின் பெருமையைப் பேசிச் சிறப்படைந்தனர். இந்த நிலையில், பழைய உரைகளில் பொதிந்து கிடக்கின்ற திறனாய்வுக்கூறுகள் போற்றுவா ரின்றிப் புறக்கணிக்கப் பட்டன. திறனாய்வாளர்களாகிய உரையாசிரியர்கள் ஆராய்ச்சி அரங்கிலிருந்து மறைந்து திரைக்குப் பின்னால் வந்து சேர்ந்தனர். உரையாசிரியர்களின் குரல், போலிப் புலமையாளர்களின் ஆரவாரக் குரல்களை விட்டு மோலோங்கி, புலமை உலகிற்குச்சென்று எட்டவே இல்லை! காலத்திற்கேற்ற கருத்து பழைய உரைகளைத் திறனாய்வு என்றும், உரையாசிரியர்களைத் திறனாய்வாளர் என்றும் கூறும் கருத்துக்களை ஏற்கத் தயங்குபவர் சிலர் உள்ளனர். அவ்வாறு தயங்குபவர்களுக்கு ஆங்கில அறிஞர் டி.எஸ்.எலியட் (Function of criticism என்னும் கட்டுரையில்) கூறும் கருத்துக்கள் பெரும் பயனைத் தரும். பன்மொழிப் புலவர் தெ.பொ.மீ. ‘பாட்டிலே புரட்சி’ என்னும் நூலில் (பக்கம்-82) எலியட் அவர்களின் கருத்துக்களைத் தந்துள்ளார்: “கலையில் எந்தப் பரம்பரையும் முன்சென்ற பரம்பரையைப்போல ஒரே வகையான ஈடுபாடு கொள்வதி்ல்லை. கலையில் திளைக்கும்பொழுது தனித்தனி ஆட்களைப்போல ஒவ்வொரு தலைமுறையும் தனக்கே சிறப்பாக அமைந்த சுவை வகையினைத் தன் அனுபவ நிலையில் தன்னோடு கொண்டு வருகிறது; தான் வேண்டியதனையே கலையிடமிருந்து கேட்கிறது; தனக்கு வேண்டிய கலையைப் பயன்படுத்திக் கொள்ளுகிறது.” இந்தக் கருத்துக்களை நினைவில் கொண்டு உரையாசிரியர்கள் தம்காலத்திற்கு ஏற்றவாறு ஆராய்ச்சிகளை எழுதினர் என்றும், உரைகளும் காலத்திற்கேற்ற தேவையான ஆராய்ச்சிகள் என்றும் தெளியவேண்டும். இன்றைய ஆராய்ச்சியாளர்கள் தமக்குமுன் தோன்றி எழுதி ஆராய்ச்சி நிகழ்த்திய உரையாசிரியர்களைப் போற்ற |