பக்கம் எண் :

உரையாசிரியர்கள்144

வேண்டும். அவர்கள் என்ன கருதினார்கள் என்று அறிய வேண்டும்.
அப்போதுதான் புதுமையும் பழமையும் இணையும். முன்னோர்கள்
விட்டதிலிருந்து நாம் தொடர முடியும். இத்தகைய முயற்சியில்
ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுமாறு அறிஞர் டி.எஸ்.எலியட் கூறுகின்றார்:

     “கலைத் தொண்டாற்ற வேண்டுமானால் ஒவ்வொரு தலைமுறைக்கும் -
ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒவ்வொரு வகையான கலவைப்பொருள்
(கலையின் ஊடுநிலை) வேண்டும். ஒவ்வொரு தலைமுறையும் முன்சென்ற
தலைமுறை பயன்படுத்திய கலவையைவிடத் தான் புதிதாக அமைக்கும்
கலவையையே மிகமிக விரும்பும். இங்குதான் புதிய இலக்கியத் திறனாய்வாளர்
பயன் நிறைந்த தொண்டினைச் செய்கின்றனர். எப்படி? இவருடைய குற்றங்கள்
முன் சென்ற தலைமுறையின் குற்றங்களின் வேறாம். இத்தகைய
ஆராய்ச்சிவாணர்கள் இடையீடின்றி எவ்வளவுக்கு எவ்வளவு தொடர்ந்து
வருகின்றனரோ அவ்வளவுக்கு அவ்வளவு கலைத் திருத்தங்கள் மிகமிகச்
சிறந்துவரும்
*”

7. புது உலகம் படைப்போம்

    பழைய நூல்களைக் கற்க அஞ்சும் மாணவனை நன்னூலின் பாயிரம்
‘தொன்னூற்கு அஞ்சித் தடுமாறும் உளத்தன்’ என்று குறிப்பிடுகின்றது.
பழைய உரைகள், புதிய கொள்கைகளுக்குப் பொருந்தி வராதவை என்று
நினைக்கும் மனப்போக்குச் சிலரிடம் காணப்படுகிறது. அவற்றை ஆழ்ந்து
பயின்றால் படைக்கும் திறனும், கற்பனை வளமும், புதுமை நாட்டமும்
போய்விடும் என்ற அச்சமும் சிலரிடம் உண்டு. அந்த அச்சம்,
அறியாமையால் ஏற்படுவதாகும்.

     தமக்கு முன் தோன்றியிருந்த முத்தமிழ் நூல்கள் அனைத்தையும்
கற்றுத் தேர்ந்து விழுமிய புலமை பெற்ற இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்
இயற்றினார். ‘கல்வியிற் பெரியவர் கம்பர்’ என்று புலவர் உலகம் பாராட்டும்
அளவிற்கு, கல்விக் கடலில் மூழ்கித் திளைத்த கம்பர், இராமாயணம்
இயற்றினார். சிற்றிலக்கியச் செல்வராய் விளங்கும் குமர குருபர அடிகள்
முன்னோர் நூல்களை ஆழ்ந்து பயின்று, கற்பனைச் சிறப்புமிக்க
பாடல்களைப் பாடினார். இலக்கணப் புலமையும்


 * பாட்டிலே புரட்சி - (1963) தெ. பொ. மீ-பக் - 83