பக்கம் எண் :

145அறிமுகம்

இலக்கியக் கல்வியும் குறைவின்றிப் பெற்றிருந்த பாரதிதாசன் புதுமைக்
கவிதைகளைப் படைத்து, புரட்சிக் கவிஞர் என்று போற்றப் பெற்றார்.

     புதியன, பழையன என்பவை காலத்தில் இல்லை! கால இடைவெளிக்கு
எவ்வித ஆற்றலும் இல்லை! கருத்திற்கே ஆற்றல் உண்டு. புதுமை, பழைமை
என்பன எல்லாம் கருத்தில்தான் உள்ளன. இன்றைய எழுத்தாளனின்
சிந்தனை மிகப் பிற்போக்காக இருக்கலாம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்
தோன்றிய நூலில் புதுமை மிளிரலாம்.

     நேற்று வாழ்ந்தவரை இன்று வாழ்வோர் மறந்தால், இவர்களை நாளை
வருவோர் மறந்து விடுவர். நேற்றைய கருத்துகள் பழையவை எனின்,
இன்றைய கருத்தும் நாளைக்குப் பழைமையாகிவிடும்!

உரைகளைப் போற்றுக

    அமுதக் கடல் இருக்கப் பசியால் இளைப்பது மடமை! கற்கண்டு மலை
இருக்க ஆங்காங்கே சிந்திக் கிடக்கும் சர்க்கரைத் தூளை நாடுவது பேதைமை!
நன்னீர்ப் பொய்கை இருக்கத் தண்ணீருக்கு நாவறண்டு நிற்பது அறியாமை!
காய்கதிர்ச் செல்வன் இருக்க மின்மினியிடம் ஒளி பெற எண்ணுவது
சிறுபிள்ளைத்தனம்! முன்னோர் தேடிவைத்துள்ள பெருஞ் செல்வம் வீட்டில்
இருக்க அதனை அறிந்துகொள்ளாமல், மற்றவரிடம் கடன் கேட்டுத்
தாழ்மையுற்று வாழ்வது இழிந்த நிலை!

     ஆராய்ச்சி அறிஞர் டி.எஸ்.எலியட் கூறும் கருத்துகளை இங்கே
நினைக்கவேண்டும்:

     “அவ்வவ்போது ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறையேனும் இலக்கிய
ஆராய்ச்சிவாணன் தோன்றி, நம் இலக்கியத்தின் சென்ற காலத்தைத் திரும்பிப்
பார்த்து ஆராய்ந்து, பாவாணரையும் பாக்களையும் புதியதொரு முறையில்
பொருத்த முறும்படி அமைத்துக் காட்டுதல் வேண்டும். இது ஒரு புரட்சி
வேலையன்று. முழு நோக்கில் கணக்கைச் சரிபார்த்தல் போலாகும் இது.”1

     டாக்டர் வ.சுப. மாணிக்கம் இக்காலத்தவர்க்குப் பழைய நூல்களைப்
பயிலுமாறு கூறும் அறிவுரை, பொன்னே போல் போற்றிக்கொள்ளத்
தக்கதாகம்:


 1. பாட்டிலே புரட்சி - தெ. பொ. மீ. (1963) பக்கம் 30.